தரமில்லாத மக்காச்சோள விதைகளால் விளைச்சல் பாதிப்பு: இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை

விழுப்புரம் அருகே தரமில்லா மக்காச்சோள விதையை பயிரிட்டதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால்,

விழுப்புரம் அருகே தரமில்லா மக்காச்சோள விதையை பயிரிட்டதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், இழப்பீடு வழங்கக் கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.
விழுப்புரம் அருகே காணையை அடுத்த வயலாமூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுகுமார் (38). இவர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை தனது குடும்பத்தினருடன் முழுமையாக விளைச்சலை எட்டாத மக்காச்சோள கதிர்களுடன் வந்து மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: கடும் வறட்சியிலும் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி எனது 4 ஏக்கர் சொந்த நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டேன். 
இதற்கான மக்காச்சோள விதைகளை விழுப்புரம் கே.கே. சாலையில் உள்ள தனியார் விதைப் பண்ணையிலிருந்து வாங்கியிருந்தேன். 
அந்த விதைகள் தரமற்ற விதைகளாக இருந்ததால், அறுவடைக் காலம் வந்தும் இதுவரையில் கதிர்களில் மக்காச்சோள மணிகள் உருவாகவில்லை. விளைச்சல் இல்லாததால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் விதைப் பண்ணையில் சென்று கேட்டபோது, எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, காணை வேளாண்மை அலுவலகம் மற்றும் விழுப்புரம் வேளாண்மை விதை ஆய்வு மைய அலுவலகத்தில் மனு அளித்தேன். 
வேளாண் அதிகாரிகள் விவசாய நிலத்துக்கு வந்து பார்வையிட்டுச் சென்றனர். விதை ஆய்வு இணை இயக்குநரும் வந்து பார்வையிட்டுச் சென்றார்.
மக்காச்சோளம் பயிரிடுவதற்காக சுமார் ரூ. ஒரு லட்சம் வரை செலவு செய்துள்ளேன். 
தரமற்ற விதைகளால் பெருந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்ற தரமில்லாத விதைகளை விற்பனை செய்யும் விதை மையங்கள், நிறுவனங்கள் மீது வேளாண் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com