சுடச்சுட

  

  கல்வராயன்மலையில் வட்டாரக் கல்வி அலுவலகம் தேவை: மலைவாழ் மக்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 13th June 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கல்வராயன்மலையைத் தலைமையிடமாகக் கொண்டு, வெள்ளிமலையில் வட்டாரக் கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் ஆரம்பூண்டி, இன்னாடு, கரியாலூர், கிளாக்காடு, குண்டியாநத்தம், மணியார்பாளையம், மேல்பாச்சேரி, பாச்சேரி, பொட்டியம், புதுப்பாலப்பட்டு, சேராப்பட்டு, தொரடிப்பட்டு, வஞ்சிக்குழி, வெள்ளிமலை, வெங்கோடு ஆகிய 15 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. 
  இந்த ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளி
  மலையில் செயல்பட்டு வருகிறது. 
   2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கல்வராயன்மலை ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 56,327. அதில், பட்டியல் இன மக்கள் தொகை 1,908. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 45,176. 
  இந்த நிலையில், கல்வராயமன்மலையில் 63 அரசுப் பள்ளிகள், 3 டேனிஷ்மிஷன் பள்ளிகள் என மொத்தம் 66 பள்ளிகள் உள்ளன. இதில், சங்கராபுரம் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு உள்பட்டு 7 பள்ளிகளும், கள்ளக்குறிச்சி வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு உள்பட்டு 20 பள்ளிகளும், சின்னசேலம் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு உள்பட்டு 3 பள்ளிகளும், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் பொறுப்பில் 35 பள்ளிகளும், மாதிரிப் பள்ளி ஒன்றும் அடங்கும். 
  கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்டு சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் என மூன்று வட்டாரக் கல்வி அலுவலகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று அலுவலகங்களில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கல்வராயன்மலையில் உள்ள பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 
  ஆனால், இவர்கள் கல்வராயன்மலையில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்வதென்பது, அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில், கல்வராயன்மலை அந்த அளவுக்கு பரந்து, விரிந்து காணப்படுகிறது. 
  இதனால், கல்வராயன்மலையில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறுகின்றனர். மாணவர்களும், போதிய கல்வி பெற முடியாமல் பரிதவிக்கின்றனர். 
  மேலும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களும் மலைவாழ் மாணவர்களுக்கு முறையாக சென்றடைவது கிடையாது என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
  இந்த நிலையில், மலைவாழ் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், கல்வி அதிகாரிகளின் சிரமத்தைப் போக்கவும், கல்வராயன்மலையைத் தலைமையிடமாகக் கொண்டு, வெள்ளிமலையில் புதிதாக வட்டாரக் கல்வி அலுவலகத்தை அமைக்க உடனடியாக தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai