குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி

விழுப்புரத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.


விழுப்புரத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் (ஜூன் 12), விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பங்கேற்று, குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். 
தொடர்ந்து,  பள்ளி மாணவர்களுக்கு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு 
பேச்சுப் போட்டி,  கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின, மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.  
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி,  திருச்சி  சாலை வழியாக, விழுப்புரம் நான்கு முனை சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.  18 வயது நிரம்பாத குழந்தைத் தொழிலாளர்களை,  பணிக்கு அமர்த்துவது குற்றம்  என்பதை விளக்கி இந்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
இப்பேரணியில்,  பள்ளி மாணவ,  மாணவிகளுடன், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், அமைப்புசாரா நல வாரியங்களின் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், அரசுப் பணியாளர்கள்,  அலுவலர்கள் கலந்துகொண்டு, குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான 
உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, தொழிலாளர் நல உதவி ஆணையர் கோ.ராமு,  முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் தனசேகர்,  உதவி ஆய்வாளர்கள் சார்லி, இராமு,  சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டையில்...:  உளுந்தூர்பேட்டையில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.  சமூக பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துடன் உளுந்தூர்பேட்டை சைல்டு லைன் ஆகியவை சார்பில் உளுந்தூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலச்சந்தர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பேரணியில், விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணகுமாரி, பள்ளித் தலைமையாசிரியர் கலைச்செல்வன் மற்றும் காவல்துறையினர், சைல்டு லைன் பணியாளர்கள், பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com