கள்ளக்குறிச்சி அருகே லாரி மீது பேருந்து மோதல்: 3 பேர் பலி
By DIN | Published On : 14th June 2019 07:28 AM | Last Updated : 14th June 2019 07:28 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே வியாழக்கிழமை அதிகாலை லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் 3 பயணிகள் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து சேலத்துக்கு தனியார் சொகுசுப் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது. இந்தப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். கோவை மாவட்டம், வி.சித்தாபுத்தூரைச் சேர்ந்த ஓட்டுரான செல்வம் பேருந்தை ஓட்டினார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து வந்த போது, இரும்புக் கம்பிகள் ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற லாரியை பேருந்து முந்திச் செல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. இதனால், பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
மேலும், பேருந்தில் பயணித்த சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த வாசன் மகன் வினோத்குமார் (32), ஈரோடு மாவட்டம், வி.பி.அக்ராலபுரத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் முகமது ஜில்பர் (33), உத்தரப் பிரதேச மாநிலம், பாசியாபாத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரதாப் மகன் சிவாசிங் (35) ஆகியோர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த முருகேசன் மகன் மனோஜ்குமார் (35), திருப்பூர் மாவட்டம், மங்கலைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரியன் (30), பேருந்து ஓட்டுநர் செல்வம் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த தியாகதுருகம் போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராமநாதன், தியாகதுருகம் காவல் ஆய்வாளர் குமார் ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர், விபத்தில் சிக்கிய பேருந்து, லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநரான விழுப்புரம் அருகே சொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீஸார் பேருந்து ஓட்டுநர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.