சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து என மோசடி: பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
By DIN | Published On : 14th June 2019 09:50 AM | Last Updated : 14th June 2019 09:50 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து அளித்து ஏமாற்றி வரும் போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
இதுகுறித்து திருக்கோவிலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த டீ கடை ஊழியரான ரகோத்தமன் (50) , விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் வியாழக்கிழமை வந்து புகார் மனு அளித்துக் கூறியதாவது:
விக்கிரவாண்டி அருகே வீடூர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் மூலிகை மருத்துவம் பார்ப்பதாக ஏமாற்றி வருகிறார். இவருடன் 4 சகோதரர்களும், ஊழியர்களும் வேலை பார்க்கின்றனர்.
இவர்கள் சர்க்கரை நோயை 15 நாளில் மூலிகை மருந்து மூலம் முழுமையாக குணப்படுத்துவோம் என்று விளம்பரப்படுத்தி, மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்தத் தகவலை அறிந்து நானும், சர்க்கரை நோய் பாதித்த எனது மனைவி அலமேலுவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீடூரில் உள்ள ரவிச்சந்திரனின் மூலிகை மருத்துவ மையத்துக்குச் சென்றோம். பின்னர், ரூ.6 ஆயிரம் வரை செலுத்தி ரவிச்சந்திரன் அளித்த மூலிகைப் பொடி, எண்ணெய் போன்ற 2 புட்டி மருந்து ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு வந்த எனது மனைவி அலமேலுவுக்கு கால் வீக்கம் ஏற்பட்டு, திடீரென ஓட்டை விழுந்து காயம் ஏற்பட்டது.
காலில் ஏற்பட்ட காயம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால், மதகடிப்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலமேலு சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சைக்காக அவரது கட்டை விரல் அகற்றப்பட்டது. போலியான மருந்தை சாப்பிட்டு, ஏமாந்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்.
எனவே, சர்க்கரை நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து என போலி மருத்துவம் பார்த்து வரும் நபர்களை பிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் போலி மருத்துவம் பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்த ரவிச்சந்திரன், மீண்டும் மூலிகை மருந்தை விற்பனை செய்து வருகிறார். இதனால், எங்களைப்போல பிற பொதுமக்களும் பாதிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.