விக்கிரவாண்டி கோயிலில் விக்கிரமசோழன் கல்வெட்டுகள்

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோயிலில் விக்கிரமசோழன் காலத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோயிலில் விக்கிரமசோழன் காலத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கோயில்களில் சிதைந்துள்ள கல்வெட்டுகளை புதுப்பித்து, ஆய்வு மேற்கொண்டு வரும் விழுப்புரம் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்கள் த.ரமேஷ், சீ.ஸ்ரீதர் உள்ளிட்ட குழுவினர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள புவனேஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலில் கல்வெட்டுகளை புதுப்பித்து,  அண்மையில் நாங்கள் ஆய்வு செய்தபோது, 5 இடங்களில் கல்வெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவற்றில் சில 
தொல்லியல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது முதலாம் குலோத்துங்க சோழனுடையதாகும் (கி.பி. 1102). இதனால், அந்தக் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். தற்போது இந்தக் கோயிலில் விக்கிரமசோழனின் 4-ஆவது ஆட்சியாண்டு (கி.பி.1122) கல்வெட்டை கருவறையில் புதிதாக கண்டறிந்துள்ளோம்.
இந்தக் கல்வெட்டில், இவ்வூர் கங்கைகொண்ட சோழ வளநாட்டுப்புறையூர் நாட்டு நகரம், புவனிமாணிக்கபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து  விக்கிரவாண்டியானது சோழர் காலத்தில் புவனிமாணிக்கபுரம் என அழைக்கபட்டது எனலாம். அந்தக் காலத்தில் இவ்வூர் நகரமாகவும் விளங்கியுள்ளது.
இந்தக் கோயில் இருப்பிடம் சேதிகுல சிந்தாமணி ஈஸ்வரம் என அழைக்கப்பட்டிருந்ததையும், இந்தக் கோயிலுக்கு திருநொந்தா விளக்கு எரிப்பதற்கும்,  திருவமுது படைப்பதற்கும் காசுகள் தானமாக வழங்கப்பட்டதையும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
விக்கிரம சோழனின் மற்றொரு கல்வெட்டில், இந்தக் கோயிலுக்கு செப்புக் கிடாரம், செப்புக் குடம் அளித்ததுடன், திருநொந்தா விளக்கு எரிப்பதற்கு 20 காசுகளை கோயில் அந்தணரிடம் கொடுத்துள்ளதை தெரிவிக்கிறது. இங்குள்ள மற்றொரு கல்வெட்டில் (இராசநாராயண சம்புவராயர் கல்வெட்டு) இந்த ஊர் விக்கிரம பாண்டியநல்லூர் என கூறப்பட்டுள்ளது. 
இது, பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியன் பெயரால் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். பின்பு, விஜயநகர மன்னன் வீரநரசிம்மராய தேவரின் கி.பி.1509-ஆம் ஆண்டு கால கல்வெட்டில், இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பல்குன்ற கோட்டத்து ஒய்மான், வளநாட்டு வீடூர் பற்று விக்கிரமபாண்டி என்று கூறப்பட்டுள்ளது.
விக்கிரமபாண்டி என்று விஜயநகர காலத்தில் மருவி வழங்கப்பட்ட பெயர், தற்போது விக்கிரவாண்டி என்று அழைக்கப்பட்டு வருவதாக கல்வெட்டு மூலம் அறியலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com