நுண்ணீர் பாசனத் திட்ட விவசாயிகள் பதிவு முகாம்

கண்டமங்கலம் அருகே முட்ராம்பட்டு கிராமத்தில் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய நுண்ணீர்ப் பாசனத் திட்ட விவசாயிகள் பதிவு முகாம் அண்மையில் நடைபெற்றது

கண்டமங்கலம் அருகே முட்ராம்பட்டு கிராமத்தில் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய நுண்ணீர்ப் பாசனத் திட்ட விவசாயிகள் பதிவு முகாம் அண்மையில் நடைபெற்றது. கண்டமங்கலம் வேளாண் அலுவலர் ஜாய்சின்சமிதா வரவேற்றார். வேளாண் உதவி இயக்குநர் இரா.பெரியசாமி தலைமை வகித்தார்.
 அவர் பேசுகையில், கண்டமங்கலம் வட்டாரத்துக்கு நிகழாண்டில், 42 ஹெக்டேரில் ரூ.5.50 கோடி அளவில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 தற்போது, தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனமும், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள் மற்றும் சிறு தானியங்களுக்கு தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மழைநீர் தூவுவான் அமைத்து நீர்ப்பாசனம் செய்து பயன்பெறலாம் என்று அறிவுறுத்தினார். இந்தத் திட்டத்தில், 5 ஏக்கர் வரை உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 12.5 ஏக்கர் வரை சொட்டு நீர்ப்பாசனம் கட்டமைத்து பயன்பெறலாம். தற்போது, கண்டமங்கலம் வட்டாரத்தில் உள்ள 54 வருவாய் கிராமங்களிலும், நுண்ணீர்ப் பாசனத் திட்டம் குறித்தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
 இந்தத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற தங்களது ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல், சிறு குறு விவசாயிகள் சான்று, நில வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கையுடன், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது நுண்ணீர்ப் பாசன நிறுவனர்களிடம் கொடுத்து பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வயல்களை ஆய்வு செய்து, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நுண்ணீர் பாசனக் கருவிகள் வழங்கப்படும்.
 கண்டமங்கலம் வட்டார விவசாயிகள் இதனை வாய்ப்பை பயன்படுத்தி, நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
 முகாமில், விவசாயிகளுக்கு நுண்ணீர்ப்பாசன சாகுபடி குறித்த குறும்படம் காண்பிக்கப்பட்டது.
 வேளாண் அலுவலர்கள் மஞ்சு, சிவானந்தம், சுதா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com