திருக்கோவிலூரில் கபிலர் கோட்டம் அமைக்க தமிழ்ச் சங்கம் கோரிக்கை

திருக்கோவிலூரில் கபிலர் கோட்டம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவலூர் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்தது.


திருக்கோவிலூரில் கபிலர் கோட்டம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவலூர் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்: திருக்கோவிலூரில் உள்ள தென்பெண்ணையாற்றில் சங்க காலப் பெரும் புலவர் குறிஞ்சிக் கபிலரின் நினைவிடம் உள்ளது. இந்த இடத்தைக் காண வெளியூர், உள்ளூரில் இருந்து சுற்றுலாப் பயணிகள், அறிஞர்கள், ஆய்வு மாணவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கபிலர் நினைவிடத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. 
இந்த நிலையைப் போக்க, தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயில் பின்புற வளாகத்தில் இருந்து கபிலர் குன்றுக்கு தொங்கு பாலம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம், ஒளவை கோட்டம் அமைத்து சாதனைப் படைத்த தமிழக அரசு, திருக்கோவிலூரில் கபிலர் கோட்டம் அமைக்க வேண்டும். 
திருக்கோவிலூரில் தொன்மையான வரலாற்று ஆவணங்களை பராமரித்துப் பாதுகாக்க, தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டவும், இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை மீண்டும் தொடங்கவும் ஆவன செய்ய வேண்டும்.
மேலும், திருக்கோவிலூரை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி, வாழ்ந்து வரலாறான கபிலர் ஆகியோர் சிலைகளை அமைத்து பெருமை சேர்க்க வேண்டும். 
தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்ட திருக்கோவிலூரின் நான்கு மாட வீதிகளுக்கு மெய்ப்பொருள் நாயனார், கபிலர், ஒளவையார், அங்கவை - சங்கவை ஆகியோர் பெயர்களைச் சூட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com