மளிகைக் கடையில் பணம் திருடியவர் போலீஸில் ஒப்படைப்பு
By DIN | Published On : 24th June 2019 10:00 AM | Last Updated : 24th June 2019 10:00 AM | அ+அ அ- |

சங்கராபுரம் அருகே, பாவந்தூர் கிராமத்தில் மளிகைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை பணம் திருடிய இளைஞரை ஊர் மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்த தயாளன் மனைவி பழனியம்மாள் (55). இவர், அதே ஊரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உறவினரின் குழந்தையை கடைக்கு அருகில் உள்ள வீட்டில் விட்டு வருவதற்காக கடையிலிருந்து பழனியம்மாள் சென்றார். அப்போது, அவரது கடைக்குள் புகுந்த ஒரு இளைஞர், பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்ததாகத் தெரிகிறது. இதைப் பார்த்த பழனியம்மாள், கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞரைப் பிடித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இளைஞரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பேரால் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராயன் மகன் கோவிந்தராஜ் (19) என்பதும், மளிகைக் கடையில் ரூ.950-ஐ திருடியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் கோவிந்தராஜை கைது செய்ததுடன், பணத்தையும் மீட்டனர்.