சுடச்சுட

  

  விழுப்புரம் மாவட்டத்தில் ஜாதி சான்று வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக, ரெட்டி (கஞ்சம்) நலச்சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
   இது குறித்து, அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் இல.துளசிதரரெட்டி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு ரெட்டி (கஞ்சம்) வகுப்பினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு, நீண்ட காலமாக ஜாதி சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
   விழுப்புரம் மாவட்டத்தில், வசித்து வரும் ரெட்டி (கஞ்சம்) குடும்பத்தினர் சுமார் 5,437 பேரில் 3,210 பேர்களுக்கு மட்டுமே நிலையான ஜாதி சான்றிதழ் அட்டையை வழங்கியுள்ளனர். இந்த சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போதைய நடைமுறைகளின் படி அனைவருக்கும் புதிய சான்றிதழ்கள், இணைய வழியில் பதிவு செய்து வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
   இதனால், ஏற்கெனவே பெறப்பட்ட ஜாதி சான்றினை ஆதாரமாகக் கொண்டு, ரெட்டி சமுதாய மக்கள் விண்ணப்பிக்கும் போது, கிராம நிர்வாக அலுவலர் நிலையில், எந்த தகவலும் தெரிவிக்காமல் மனுவை தள்ளுபடி செய்து வருகின்றனர்.
   தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ரெட்டி (கஞ்சம்) வகுப்பினருக்கு சாதி சான்றிதழ்கள் வழக்கம் போல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரெட்டி (கஞ்சம்) ஜாதி சான்றிதழ் வழங்க, கிராம நிர்வாக அலுவலர் நிலையிலேயே மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை திங்கள் கிழமை நேரில் சந்தித்து, சங்கம் சார்பில் மனு அளித்து முறையிட்டோம். இதனையறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலரிடம் தெரிவித்து, ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கமாறு, அனைத்து வட்டாட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறிவுரை வழங்கினார்.
   ஆனால், இதனை செயல்படுத்தாத மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், பல்வேறு காரணங்களை தெரிவித்து, வேண்டுமென்றே தாமதம் செய்கிறார். இந்தாண்டு தற்போது, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் காலம் என்பதால், ஜாதி சான்றிதழ்களைப் பெற முடியாமல் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
   இது தொடர்பாக, விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக, அதில் தெரிவித்துள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai