விவசாயிகளுக்கு நிதியுதவி: விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 

விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி பெற, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி பெற, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
 இது குறித்து, ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் கடந்த 24.02.2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 நிதியுதவி, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, ரூ.2000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
 இதன் தொடர்ச்சியாக, இந்தத் திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும், அதாவது சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் இந்தத் திட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தகுதியான அனைத்து விவசாயிகளும், தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலரை 25.06.2019 முதல் தொடர்பு கொண்டு, விண்ணப்பங்கள் கொடுத்து, பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் பயனடையுமாறு, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
 திண்டிவனத்தில்...
 திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் பெரு விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை பெற்றுத் தருவதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 வட்டாட்சியர் ஜி.ரகோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அனந்தசேனன், மண்டல துணை வட்டாட்சியர்கள் கிருஷ்ணதாஸ், வேலு, தேர்தல் துணை வட்டாட்சியர் ஜோதிபிரியா, துணை வட்டாட்சியர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சிறு குறு விவசாயிகளுக்கு கடந்த 15 நாள்களாக மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், திண்டிவனம் வட்டத்தில் உள்ள பெரு விவசாயிகளிடமும் மனுக்களை பெற்று அவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தத் திட்டம் குறித்து அனைத்து கிராமங்களிலும் விளம்பரப் பலகைகளை அமைக்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com