விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டம்
By DIN | Published On : 28th June 2019 08:23 AM | Last Updated : 28th June 2019 08:23 AM | அ+அ அ- |

காணையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க வட்டத் தலைவர் சி.அழகுநாதன் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜா முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், செயலர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களிலிலும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவது இல்லை. சில இடங்களில் பணிகளை வழங்கினாலும், கூலி ரூ.229 வழங்கப்படுவது இல்லை.
இந்தத் திட்டத்தில் குளம் தூர்வாருதல், வரப்பு மடித்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்யலாம் என்று அரசு அறிவித்ததால், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஒரு சில நபர்களுக்கு வரப்பு மடித்தல் உள்ளிட்ட வேலையை ஒதுக்கி, இயந்திரத்தை வைத்து பணிகளை செய்துவிட்டு முறைகேடு செய்கின்றனர்.
இந்த நிலையைப் போக்கி, முறையாக பதிவு செய்து அடையாள அட்டை வைத்திருப்போருக்கு தேசிய ஊரக வேலையை வழங்க வேண்டும். காணை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களுடன் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ஏ.நாகராஜ், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்.மணிகண்டன், இ.பஞ்சம்மா, ஏ.அம்பிகா, ஏ.கோவிந்தன் மற்றும் மாம்பழப்பட்டு, கோணூர், பள்ளியந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.