விவசாயி பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
By DIN | Published On : 28th June 2019 08:24 AM | Last Updated : 28th June 2019 08:24 AM | அ+அ அ- |

மேல்மலையனூர் அருகே விவசாயி பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேல்மலையனூர் வட்டம், தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் துரைராஜ் (50). விவசாயியான இவர், குடும்பச் செலவுக்காக மேல்மலையனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதன்கிழமை நகைகளை அடகு வைத்து, ரூ. ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை பெற்றுள்ளார். பின்னர், அவர் ஏற்கெனவே வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை அந்தப் பணத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.2 லட்சத்தை பையில் வைத்து தனது பைக் பெட்டியில் வைத்துள்ளார்.
இதையடுத்து, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த துரைராஜ், இயற்கை உபாதை கழிப்பதற்காக மேல்மலையனூர் - தாயனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து துரைராஜ் அளித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.