நெகிழிப் பொருள்கள் தடையால் 2 லட்சம் பேர் பாதிப்பு: ஏ.எம்.விக்கிரமராஜா

நெகிழிப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், தமிழகத்தில் அந்தத் தொழிலைச் சார்ந்த வணிகர்கள், தொழிலாளர்கள் என 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின்

நெகிழிப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், தமிழகத்தில் அந்தத் தொழிலைச் சார்ந்த வணிகர்கள், தொழிலாளர்கள் என 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
 விழுப்புரம் சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற வணிகர் சங்கத்தின் 9-ஆவது பொதுக் குழுக் கூட்டம், விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:
 தமிழகத்தில் வணிகம் சார்ந்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் என ஒரு கோடி பேர் உள்ளனர். தாங்களே முதலீடு செய்து, தொழில் நடத்தி, ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குபவர்கள் வியாபாரிகள்.
 ஜி.எஸ்.டி. மூலமாக
 ரூ.1 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து வரியாகப் பெற்று, அரசுக்கு செலுத்துபவர்கள் வியாபாரிகள். ஆனால், மத்திய, மாநில அரசுகளோ வியாபாரிகளை கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் அதிகாரிகளால் வியாபாரிகள் மிரட்டப்படுகின்றனர். விவசாயிகளைப் போல, வியாபாரிகளும் நலிவடைந்து வருகின்றனர்.
 வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வித நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 28 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தற்போது 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைக்க வேண்டும். ஏனெனில், வரி குறைக்கப்பட்டால் வரி ஏய்ப்பு
 இருக்காது.
 தமிழகத்தில் 14 விதமான நெகிழிப் பொருள்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது.
 இதனால், அந்த தொழிலை சார்ந்திருந்த வணிகர்கள், தொழிலாளர்கள் என 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிறு வியாபாரிகள் உற்பத்தி செய்து வந்த நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டு நிறுவனப் பொருள்களில் அதே வகையான நெகிழிகள் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகவே, வணிகர்களை பாதிக்கும் தேவையில்லா சட்டங்களை அமல்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்றார் ஏ.எம்.விக்கிரமராஜா.
 இந்த கூட்டத்துக்கு விழுப்புரம் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் கே.ஜெ.ரமேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா, கடலூர் மண்டலத் தலைவர் சண்முகம், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஜனகராஜ், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிச் செயலாளர் செந்தில்குமார், விழுப்புரம் சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுச் செயலாளர் பிரேம்நாத், கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தீர்மானங்கள்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விழுப்புரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய இடம் ஒதுக்கித் தராமல் இருப்பதற்கும், விழுப்புரத்தில் மீன் மார்க்கெட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் இருப்பதற்கும், காய்கறி வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தராமல் இருப்பதற்கும் நகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து
 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 பயங்கரவாத தாக்குதல்களில் உயிர் நீத்த துணை ராணுவப் படை வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com