விழுப்புரம் புறவழிச் சாலை - செஞ்சி சாலை சந்திப்பில் ரூ.31 கோடியில் பாலம் அமைக்க பூமி பூஜை
By DIN | Published On : 04th March 2019 08:54 AM | Last Updated : 04th March 2019 08:54 AM | அ+அ அ- |

விழுப்புரம் புறவழிச்சாலை-செஞ்சி சாலை சந்திப்பில் ரூ.31 கோடியில் தரைமட்டப்பாலம் அமைக்க மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
என்.எச்.45 எனும் தேசிய நெடுஞ்சாலை விழுப்புரம் நகரினுள் செல்லாமல் சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு, புறவழிச்சாலையில் செல்கிறது. இந்தப் புறவழிச்சாலையுடன் 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சிறு சாலை சந்திப்புகள் உள்ளன. இவற்றில், விழுப்புரம் நகரிலிருந்து செல்லும் செஞ்சி சாலை சந்திப்பு முக்கியமானதாகும்.
இந்த சாலை சந்திப்பு வழியாக திருவண்ணாமலை, செஞ்சி வழித்தடத்திலும், விழுப்புரம் நகருக்குள்ளும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து, செல்கின்றன. அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், அந்த சந்திப்பை கடந்து செல்வதால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.
அதனை தவிர்க்க, காவல்துறை சார்பில் அந்த பகுதியில் பேரிகார், எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நிரந்தரத் தீர்வு காண மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த நிலையில், அந்த இடத்தில் விபத்துகளை தவிர்க்கவும், விரைவாக வாகன ஓட்டிகள் செல்லவும் என்.எச். 45 தேசிய நெடுஞ்சாலையில், ரூ.31.26 கோடி மதிப்பீட்டில் புதியதாக தரைப்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக, புறவழிச்சாலையின் உயரத்தை அதிகரித்து, அதன் கீழாக செஞ்சி சாலை செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்பாலத்துக்கான பணிகளை மேற்கொள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் விரைவாக கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கும், பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு எவ்வித நெரிசலும் இன்றி விரைவாக செல்லவும், அவசர காலங்களில் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு விரைவாக செல்வதற்கும் இத்தகைய சாலைப் பணிகள் பெரிதும் உதவியாக இருக்கும். இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் அமைக்க ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், நஹாய் பொது மேலாளர் முத்து, துணை பொது மேலாளர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசேகரன், விழுப்புரம் வட்டாட்சியர் சையத் மெஹமூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.