அதிமுக வெற்றிக்கு கட்சியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுரை
By DIN | Published On : 06th March 2019 08:26 AM | Last Updated : 06th March 2019 08:26 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் தியாகதுருகம் சாலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான இரா.குமரகுரு தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலுபாபு, அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கோ.பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் எம்.பாபு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டத்துறை அமைச்சரும் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மருத்துவர் அணி பொருளாôளர் இ.குமரேசன், மாவட்ட வழக்குரைஞர் அணி பொருளாளர் இ.வெற்றிவேல், நகர துணைச் செயலாளர் வி.புண்ணியமூர்த்தி உள்ளிட்ட 21 வார்டுகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதே போல, கள்ளக்குறிச்சி ஒன்றியத்தின் சார்பில் சேலம்-சென்னை நெடுஞ்சாலை பிரிவுசாலை அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் அ.ராஜசேகர் தலைமை வகித்தார்.
தெற்கு மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு எம்எல்ஏ, க.காமராஜ் எம்.பி. முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் சி.வி. சண்முகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ஓரிரு நாள்களில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும். கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 143 வாக்குச்சாவடிகளுக்கு 6 ஆயிரத்து 203 வாக்குச் சாவடி முகவர்கள் உள்ளனர் ஒவ்வொருவரும் தலா 12 வாக்குகளை அவசியம் சேகரிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்முறையாக பொதுத் தேர்தலை சந்திப்பதால், அதிமுகவினர் கூடுதல் கவனத்துடன் பாடுபட்டு கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக வெற்றியை ஈட்டித்தர வேண்டும். இத் தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் வெற்றி முத்திரை பதிக்க வேண்டும் என்றார்.
அதே போல, சின்னசேலம் ஒன்றியத்துக்கு கனியாமூர் நான்குமுனை சந்திப்பு அருகிலும் தியாகதுருகம் ஒன்றியத்துக்கு வாழவந்தான்குப்பம் அருகிலும் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.