சுடச்சுட

  

  கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நாளில் தேர்தல்: திருநங்கைகள் அதிருப்தி

  By DIN  |   Published on : 16th March 2019 10:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் மாவட்டம், கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா நடைபெறும் நாளில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், திருநங்கைகள் அதிருப்தி தெரிவித்தனர்.
  விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும். இதில், தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்பர். நிகழாண்டு, சித்திரைப் பெருவிழா ஏப்.2-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்குகிறது.
  ஏப்.16-ஆம் தேதி இரவு திருமண நிகழ்வு நடைபெறும். இதில், நாடு முழுவதிலும் இருந்து வரும் திருநங்கையர்கள், தாலி கட்டி அரவானை மணம் செய்து கொள்வர். முன்னதாக, இவர்கள் விழுப்புரத்தில் நடைபெறும் "மிஸ் கூவாகம்' கலை நிழ்ச்சிகளிலும் பங்கேற்பர்.
  மறுநாள் ஏப்.17-ஆம் தேதி காலை 7 மணிக்கு சித்திரைத் தேரோட்டம் நடைபெறும்.
  இதில் பங்கேற்கும் திருநங்கைகள் பிற்பகலில் தாங்கள் கட்டியிருந்த தாலியைக் கழற்றி விதவைக் கோலம் பூணுவர். இவர்கள் வெள்ளை நிற உடையணிந்து, சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். தொடர்ந்து,  ஏப்.19-ஆம் தேதி சித்திரைப் பெருவிழா நடைபெறும்.
  கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருநங்கைகள் திருமண நிகழ்வு ஏப்.16-ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்.17-ஆம் தேதியும் நடைபெறும். 
  இந்த நிலையில், ஏப்.18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து வரும் திருநங்கைகள், பக்தர்கள் 17-ஆம் தேதி இரவுதான் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வர். இதனால், 18-ஆம் தேதி பொதுத் தேர்தலில் பலரும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்.
  இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட அரவானிகள் நலச் சங்க மாவட்டத் தலைவர் ராதாம்மாள் உள்ளிட்டோர் கூறியதாவது:
  ஆண்டுதோறும் நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ஏப்.17-இல் நடைபெறுகிறது. மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், விழாவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
  திருநங்கைகள் வாக்கு சதவீதம் குறைந்துள்ள நிலையில், தற்போது திருவிழா நாளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், அவர்கள் வாக்களிப்பது மேலும் குறைய வாய்ப்புள்ளது.
  சித்திரைத் திருவிழாவை கருத்தில் கொண்டு, மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றிமைக்க பரிசீலிக்க செய்ய வேண்டும். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கை பாரதி கண்ணம்மா மனு அளித்துள்ளார். 
  விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர் அவர்கள்.
  2013-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 30 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் 4,720 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
  மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய நாள் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளதால், தேர்தலில் திருநங்கைகள் 
  வாக்களிப்பதில் சிரமம் உள்ளதாக, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கை ஒருவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
  விழுப்புரம் மாவட்டத்தில் இதுதொடர்பாக யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. 
  அவ்வாறு கோரிக்கை மனு வந்தால், தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai