சுடச்சுட

  

  மாற்று எரிசக்தி: பொறியியல் மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 16th March 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தற்போதைய சூழலுக்குத் தேவையான மாற்று எரிசக்தியை கண்டறிய பொறியியல் மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்  என விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ராமகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
  விழுப்புரம் அண்ணா பல்கலைக் கழக அரசு பொறியியல் கல்லூரியில்,  9-ஆம் ஆண்டு அக்னிமித்ரா-2019 கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  மாணவர் செயலர் என்.தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.  கல்லூரி முதல்வர் ஆர்.செந்தில் தலைமை வகித்தார். 
  திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய (ஐஎஸ்ஆர்ஓ) முன்னாள் இயக்குநர் எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்று,  சிறப்புரையாற்றியதாவது:  
  தமிழகத்தில் கடந்த 1965-70ஆம் ஆண்டுகளில்,  5 பொறியியல் கல்லூரிகள்தான் இருந்தன.  இப்போது,  எங்கும் கல்லூரிகளாக விரிந்து,  பொறியியல் வாய்ப்பு உங்களைத் தேடி வந்துள்ளது.  பெண்களும் சமஅளவில் போட்டி போட்டுப் படிக்கும் நிலை உள்ளது. 
  புதிய பொருள்களை உருவாக்கும் அடிப்படை அறிவியல்தான் பொறியியல் படிப்பு. இந்தக் கால சமுதாயத்துக்கு தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு,  புதிய கண்டுபிடிப்புகளில் பொறியியல் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.  தற்போது, சுற்றுச்சூழல், இயற்கையை பாதுகாப்பது அவசியமாகிறது. 
  அதற்கு தேவையானவற்றை ஆய்வு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் போன்ற தேங்கும் கழிவுகளை குறைப்பதற்கும், அதனை 
  மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும் உரியனவற்றை கண்டறிய வேண்டும். தற்போதைய சூழலுக்குத் தேவையான மாற்று எரிசக்தியை கண்டறிய வேண்டும்.  
  சூரிய ஒளி பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்த வேண்டும்.  கழிவுகளை மறுசுழற்சி செய்து பயனுள்ள சக்தியாக்க வேண்டும்.  
  மாற்று எரி சக்தியை தயாரிப்பது,  பயன்படுத்துவது,  சேமிப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 
  புதிய தொழில் நுட்பத்துடன் நானோ டெக்னாலஜியை கடந்து ஆய்வுகள் செல்கின்றன. அதனுடன் வேகமாக பயணிக்க வேண்டும். தொழில் துறை,  உற்பத்திக்குத் தேவையான பொருள்களை வழங்க வேண்டும்.  போட்டி நிறைந்த உலகில் நமது தயாரிப்பு தரமாக நிற்க வேண்டும்.
  உலகளவில் அமெரிக்கா,  சீனா,  ரஷ்ய நாடுகளுக்கு அடுத்து,  4ஆவது இடத்தில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.  
  அதற்கு ஈடாக,  பொறியியல் மாணவர்கள் செயல்பட வேண்டும்.  பொறியாளர்கள்,  கூட்டாக கலந்தாய்வு செய்து புதியனவற்றை கண்டறிய வேண்டும்.  குழுவாக இணைந்து செயல்பட்டால் பலவற்றை சாதிக்கலாம்.  
  உங்கள் பொறியியல் துறையை உளமாற ஏற்று, ஆய்வு செய்ய வேண்டும்.  தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நிலை இருக்கக் கூடாது,  ஆழ்ந்து படித்து சிறந்த பொறியாளராக வர வேண்டும் என்றார்.  தொடர்ந்து நடைபெற்றக் கருத்தரங்கில்,  மாநில அளவில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் கலந்துகொண்டனர்.  மாணவி எம்.பவித்ரா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai