9 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வந்த 9

விழுப்புரம் மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வந்த 9 நாட்டுத் துப்பாக்கிகளை வெள்ளிக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, அனுமதி பெற்று பாதுகாப்புக்கும், பயன்பாட்டுக்கும் வைத்திருந்த மொத்தமுள்ள 398 துப்பாக்கிகளில் 378 துப்பாக்கிகள் வரை ஒப்படைக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளை சிலர் பதுக்கி வைத்து பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. 
இதையடுத்து, வெள்ளிக்கிழமை கரியாலூர் போலீஸார் கல்வராயன்மலைப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, தாழ்தேவனூர்-மேல்தேவனூர் செல்லும் பாதையில்  அமைந்துள்ள ஓடைப் பாலம் அருகே நாட்டுத் துப்பாக்கிகளுடன் நின்றிருந்த 4 பேர் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.
 அவர்களில், தாழ்தேவனூரைச் சேர்ந்த இளையராஜா(27), குள்ளன்(59) ஆகிய இருவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம், அழகேசன் ஆகியோர் நாட்டுத் துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு ஓடி விட்டனர்.
 இதையடுத்து, 4 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், அந்த 4 பேரின் வீடுகளிலும் சோதனையிட்டனர். அதில், அவர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய செல்வம், அழகேசன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
  இதேபோல, கல்வராயன்மலையில் உள்ள தாழ்தொரட்டிப்பட்டு கிராமத்தில் அனுமதி பெறாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமியை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு, கைது செய்யப்பட்ட குள்ளன், இளையராஜா, பொன்னுசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com