விழுப்புரத்தில் அம்பேத்கர் சிலையை மூடுவதற்கு எதிர்ப்பு

மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தலைவர்களின் சிலைகளை

மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை தலைவர்களின் சிலைகளை மறைக்கும் நடவடிக்கையின்போது, அம்பேத்கர் சிலையை மூடுவதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. 
விழுப்புரம் நகரில் பொது இடங்களில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள், வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் தேர்தல் பிரிவு அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல, முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் காந்தி சிலை அருகே உள்ள ராஜீவ் காந்தி சிலை, பாணாம்பட்டு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளை முழுவதுமாக துணியால் போர்த்தி நகராட்சியினர் மூடினர்.  அதேவேளையில், விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா சிலை,  எம்.ஜி.ஆர். சிலை,  திருவிக வீதியில் உள்ள காமராஜர் சிலை,  பெரியார் சிலை,  அம்பேத்கர் சிலை உள்ளிட்டவை மூடப்படாமல் இருந்தன.
அரசியல் காரணத்தை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட சிலைகளை மட்டும் அதிகாரிகள் மூடிச் சென்றுள்ளதாக விமர்சனம் எழுந்தது. அத்துடன், பாரபட்சமின்றி அனைத்து சிலைகளையும் மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலையை,  தேர்தல் அதிகாரிகள் உத்தரவின் பேரில்,  நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸார் வந்து, சாக்குப் போட்டு மூடினர். அப்போது,  அங்கு திரண்ட அப்பகுதியைச் சேர்ந்த திமுக,  விசிக உள்ளிட்ட கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் அம்பேத்கர் சிலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய, சட்ட மாமேதையான அம்பேத்கரின் சிலையை மூடி 
அவமதிக்கக் கூடாது என வாதிட்டனர். இதனால், அங்கு பிரச்னை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனை ஏற்காத அப்பகுதியினர்,  மூடியிருந்த சாக்கை அகற்றி, அம்பேத்கர் சிலையை திறந்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து,  ஊழியர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து,  அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த விவகாரத்தில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் சிலைகளுக்கு தேர்தல் ஆணையம் விதிவிலக்கு வழங்கியுள்ளதா என்பது குறித்து விளக்கம் பெற்று, மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com