சுடச்சுட

  

  அமைதியை சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை தேவை: போலீஸாருக்கு ஆட்சியர் அறிவுரை

  By DIN  |   Published on : 17th March 2019 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி அமைதியை சீர்குலைக்க முயல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.    
  வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  
  காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடக்கி வைத்தார். மாவட்ட தேர்தல் அலுவலரும்,  ஆட்சியருமான இல.சுப்பிரமணியன் பேசியதாவது: 
  மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி),  கள்ளக்குறிச்சி,  ஆரணி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
  மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் விதிமீறல்களைக் கண்டறிய தலா 3 குழுக்கள் வீதம்,  33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு,  24 மணி நேரமும் கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
  வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  மனு தாக்கலின்போது, 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர். 29-ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். 
  விழுப்புரம் மாவட்டத்தில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக, 161 வாக்குச்சாவடிகள் பிரச்னைக்குரியதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் போலீஸார் தீவிர பாதுகாப்புப்  பணி மேற்கொள்ள வேண்டும்.  
  மதுக் கடத்தலை தடுக்க வேண்டும்: புதுவையிலிருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மதுக் கடத்தல் நடைபெற அதிகளவில் வாய்ப்புள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
  வாகனங்களில் எடுத்துச் செல்லும் பரிசுப் பொருள்கள்,  பணத்தை பறக்கும் படையினருடன் சேர்ந்து போலீஸார் பறிமுதல் செய்ய வேண்டும்.  
  போலீஸார் தொடர்ந்து வாகனச் சோதனை நடத்தி,  முறைகேடான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.  விடுதிகளில் பணத்தை பதுக்கி வைக்க வாய்ப்புள்ளதால்,  விடுதிகளையும் கண்காணிக்க வேண்டும்.
  தேர்தல் தொடங்கி முடியும் வரை முழு பாதுகாப்பு அளிப்பது காவல் துறை கையில் உள்ளது. அமைதியை சீர்குலைக்க முயல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  கட்சி பேதமின்றி தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றி,  அமைதியான முறையில் தேர்தலை நடத்திட காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சி.முகிலன்,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)  வி.பிரபாகர்,  வட்டாட்சியர் பிரபுவெங்கடேசன்  மற்றும் அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்,  ஆய்வாளர்கள்,  உதவி ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai