சுடச்சுட

  

  விழுப்புரத்தில் சாலைப் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்

  By DIN  |   Published on : 17th March 2019 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விழுப்புரத்தில் சாலைப் பணியை பொது மக்கள் தடுத்து நிறுத்தி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  விழுப்புரம் நகராட்சி 8-வது வார்டுக்கு உள்பட்ட  முத்தோப்பு திடீர் குப்பம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
  இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று,  அங்கு சாலை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
  இந்த நிலையில்,  ஒப்பந்ததாரர்கள் சனிக்கிழமை மாலை சாலை அமைப்பதற்காக அளவீடு செய்து, பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்கள்,  சாலைப் பணியை தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  
  இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:   முத்தோப்பு திடீர் குப்பத்தில் சாலை வசதியின்றி கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். கோரிக்கையை ஏற்று பிரதான தார்ச் சாலை மட்டும் போடப்பட்டுள்ளது. குடியிருப்புகள் உள்ள பகுதியில் நான்கு கிளைச் சாலைகள் போடப்படும் என நகராட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
  இந்த நிலையில்,  தற்போது சாலைப்பணி தொடங்கியுள்ளது. அதில்,  இரண்டு இடங்களுக்கு மட்டுமே சாலை போடப்படும் எனக் கூறுகின்றனர்.    தேர்தலுக்காக இந்த சாலையை போடுகின்றனர், இதர சாலைகளை போடாமல் கிடப்பில் போட்டுவிடுவார்கள் என்பதால் தடுத்து நிறுத்தியுள்ளோம். இப்பகுதியில் அனைத்து சாலைகளும் போடப்பட வேண்டும்  என்றனர்.  
  இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,  இரண்டு சாலைகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது பணிகள் நடைபெறுகின்றன.  
  மற்ற சாலைகளுக்கு தேர்தல் முடிந்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai