தொகுதி அறிமுகம்: விழுப்புரம் (தனி): இரண்டு முறையும் அதிமுகவே வெற்றி

விழுப்புரம் (தனி)  மக்களவைத் தொகுதி உருவான பிறகு இரண்டு முறையும் அதிமுக வெற்றி பெற்றது.


விழுப்புரம் (தனி)  மக்களவைத் தொகுதி உருவான பிறகு இரண்டு முறையும் அதிமுக வெற்றி பெற்றது.
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் திண்டிவனம் (தனி),  வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதி விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரு நகராட்சிகளையும், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சிகளையும், விழுப்புரம், வானூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது.
1951-ஆம் ஆண்டு முதல் திண்டிவனம் மக்களவைத் தொகுதியாக இருந்து வந்த இந்தத் தொகுதி, தொகுதி மறுசீரமைப்பின் போது, 2009-ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் (தனி) தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டது.
வாக்காளர்கள்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் தற்போதைய வாக்காளர்கள் விவரம்: ஆண் - 7,14,211, பெண் - 7,13,480, திருநங்கை- 183 என மொத்தம் 14 லட்சத்து 27 ஆயிரத்து 874 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலின் போது, 10 லட்சத்து 68 ஆயிரத்து 171 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, 3 லட்சத்து 59 ஆயிரத்து 703 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 1,278 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 1,728 வாக்குச்சாவடி அலுவலர்கள், 1,027 வாக்குச்சாவடி மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வளர்ச்சி பெறாத தொகுதி: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி மக்களவைத் தொகுதிகளைக் காட்டிலும்,  ஓரளவுக்கு வளர்ச்சியடைந்த பகுதிகளை விழுப்புரம் மக்களவைத் தொகுதி பெற்றுள்ளது. இருப்பினும், விழுப்புரம் நகரத்தை தவிர்த்து பிற பகுதிகள் போதிய வளர்ச்சியடையாமல் உள்ளன.
விவசாயம், அதைச் சார்ந்த துணைத் தொழில்கள்தான் இங்கு பிரதானம். விழுப்புரத்தில்கூட தொழில் பேட்டைகள் இல்லை. இதனால், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு தொழில் வாய்ப்புக்காக ஏராளமானோர் இடம் பெயர்ந்து விட்டனர். புதுச்சேரியிலுள்ள தனியார் தொழில்சாலைகள் இந்தத் தொகுதி இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி உள்ளன.
தொழில்சாலைகள் தேவை: வேலைவாய்ப்புகளைத் தரும் தொழில்பேட்டைகள், உயர்கல்வி வளர்ச்சிக்கான மேம்பாட்டுப் பணிகள், மரவள்ளி, சவுக்கு ஏற்றுமதிக்கான காகிதத் தொழில்சாலை உள்ளிட்ட வேளாண் தொழில்சாலைகளையும் அமைக்க வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை.
 இந்தத் தொகுதியில் தலித்துகள், வன்னியர் சமுதாயத்தினர் பெருவாரியாக வசிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, முதலியார், உடையார், ரெட்டியார், நாயுடு சமுதாயத்தினர் அதிகளவில் உள்ளனர்.
கட்சிகளின் வெற்றி விவரம்: திண்டிவனம் மக்களவைத் தொகுதியாக இருந்த போது, உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ஜெயராமன், முனுசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். 
பின்னர், சுயேச்சையாகப் போட்டியிட்ட சண்முகம் வெற்றி பெற்றார். அதன்பிறகு, காங்கிரஸ் வசம் தொகுதி மாறியது. தொடர்ந்து 7 முறை காங்கிரஸ் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. 1967, 1996-இல் திமுக வென்றது.1998,1999-இல் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன், 2004-இல் பாமகவைச் சேர்ந்த தன்ராஜ் வெற்றி பெற்றனர்.
மறு சீரமைப்பின்போது விழுப்புரம் தனித் தொகுதியாக உருவெடுத்த பிறகு 2009- மக்களவைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மு.ஆனந்தன் வெற்றி பெற்றார். 2014-மக்களவைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 
விசிக-பாமக நேரடி போட்டி: விழுப்புரம் மக்களவைத் தொகுதியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் திமுக வசம் உள்ளன. 
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி சார்பில் து.ரவிக்குமார் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாமக கள
மிறங்குகிறது.
-இல.அன்பரசு

2014 மக்களவைத் தேர்தல்
எஸ்.ராஜேந்திரன்    அதிமுக        4,82,704
முத்தையன்                      திமுக              2,89,337
உமாசங்கர்                தேமுதிக        2,09,663
ராணி                            காங்கிரஸ்    21,461

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com