ஓய்வு பெற்ற 1,000 வி.ஏ.ஓ.க்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க நடவடிக்கை
By DIN | Published On : 24th March 2019 01:12 AM | Last Updated : 24th March 2019 01:12 AM | அ+அ அ- |

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1,000 பேரை ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமிக்க மாநில அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கடந்த 25.2.2019-ஆம் தேதியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், 2,896 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் தகுதியும், அனுபவமும் உள்ள ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஏற்கெனவே பொறுப்பான வகையில் பணி மேற்கொண்டவர்களை பயன்படுத்த வேண்டும். முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் 1,000 பேரை நியமிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
மாவட்டங்கள் தோறும் காலியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மாதம் ரூ.15,000 தொகுப்பூதிய அடிப்படையில் தேவைக்கேற்ப நியமிக்கலாம். இந்த நியமனம் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடர அனுமதிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதற்கான ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களில், தொகுப்பூதிய அடிப்படையில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் தகவலை அறிந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள், 50-க்கும் மேற்பட்டோர், தங்கள் சுய விவரக் குறிப்புகளுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று இரு தினங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.மகாலிங்கம் கூறியதாவது: ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணி நியமனத்தில் விதிகள், வயது போன்றவை விரிவாகத் தெரிவிக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் 135 காலியிடங்கள் உள்ளன. இதற்காக, விண்ணப்பங்களை வழங்கியுள்ளோம். விதிமுறைகளை பரிசீலித்து, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நியமனங்கள் குறித்து விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.பிரியாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: இதுதொடர்பான தகவல் வந்துள்ளது. தற்போது, மக்களவைத் தேர்தல் பணிகளில் அதில் கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், மாவட்ட ஆட்சியர் மூலம் விதிகளை பரிசீலித்து நியமனத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.