தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்: முத்தரசன்

கட்டுப்பாடுகள் விதிப்பதிலும், விதிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.

கட்டுப்பாடுகள் விதிப்பதிலும், விதிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.
 மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 திருவிழாவைப் போல அல்லாமல் கொள்கைப் போராட்டமாக தேர்தல் நடைபெற வேண்டும். கொள்கைகளின் அடிப்படையில் மத்தியிலும், மாநிலத்திலும் மக்களின் தீர்ப்பு இருக்க வேண்டும்.
 அரசியல் சாசனத்தின்படி, தனித்த அமைப்பாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம், எந்தவித சார்புமின்றி, நடுநிலையுடன் செயல்படுவதாய் தெரியவில்லை. முதலில் திருவாரூரில் மட்டும் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாங்கள் வழக்குத் தொடுக்கவே, அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
 பின்னர், மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது இங்கு நடைபெறும், ஆட்சியைக் காப்பாற்ற துணையாக இருப்பது போல உள்ளது. இந்த நிலையில், சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்தார்.
 ஆகவே, காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளையும் சேர்த்து 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 தமிழகம் முழுவதும் கட்சிகளின் கொடிகள், சின்னத்தை மூடி மறைக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கும் தேர்தல் ஆணையம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட முகப்பில் இடம்பெற்றுள்ள இரட்டை இலை சின்னத்தை ஏன் மறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை? இனியாவது, தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
 தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.
 கடந்த மக்களவைத் தேர்தலின்போது மோடி அலை வீசியது உண்மைதான். அவரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி, அந்த அலை வீசியது.
 கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருவாய் இரு மடங்கு உயரும் போன்ற அவர் அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
 தமிழகத்தில் ஏராளமான பிரச்னைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் பொள்ளாச்சி சம்பவம். இதில் ஆளும் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு தொடர்பு உள்ளது. தமிழகம் இதுவரை கண்டிராத முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். மாநில உரிமைகளை பறி கொடுத்து விட்டார்.
 இந்தத் தேர்தல் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார் இரா. முத்தரசன்.
 பேட்டியின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் துரை. ரவிக்குமார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com