Enable Javscript for better performance
கள்ளக்குறிச்சி: திராவிடக் கட்சிகள் ஆதிக்கம்!- Dinamani

சுடச்சுட

  

  விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பெருமளவு மலைசார்ந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்தத் தொகுதியில், விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய பேரவைத் தொகுதிகளும், அருகே உள்ள சேலம் மாவட்டம், கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய பேரவைத் தொகுதிகளும் அடங்கியுள்ளன.
   15 லட்சம் வாக்காளர்கள்: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில், 21.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஆண் 7,50,610, பெண் 7,61,191, திருநங்கை 171 என மொத்தம் 15,11,972 வாக்காளர்கள் உள்ளனர். இந்துக்கள் 85 சதவீதம், முஸ்லிம்கள் 9 சதவீதம், கிறிஸ்தவர்கள் 5 சதவீதம் உள்ளனர். பெரும்பகுதி தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், வன்னியர்கள், இதர சமுதாயத்தினர் சம அளவிலும் உள்ளனர். 71 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
   வாகை சூடியவர்கள்: தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு உருவான கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த 2009-இல் நடைபெற்ற முதல் தேர்தலின் போது, ஆதி.சங்கர் (திமுக) 3,63,601 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட, கோ.தன்ராஜ் (பாமக) 2,54,993 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். எல்.கே.சுதீஷ் (தேமுதிக )1,32,223 வாக்குகளும், நடிகர் டி.ராஜேந்தர் சுயேச்சையாக 8,211 வாக்குகளும் பெற்றனர். 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் க.காமராஜ் 5,33,383 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவைச் சேர்ந்த கல்வியாளர் மணிமாறன் 3,09,876 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஈஸ்வரன் (தேமுதிக) 1,64,183 வாக்குகளும், தேவதாஸ் (காங்கிரஸ்) 39,677 வாக்குகளும் பெற்றனர்.
   பின் தங்கிய தொகுதி: மிகவும் பின்தங்கிய, மலை கிராமங்களைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில், கல்வராயன்மலை, ஏற்காடு ஆகியவை சுற்றுலாப் பகுதிகளாக உள்ளன. இதில், ஏற்காடு மட்டுமே சுற்றுலாத் தலமாக பயன்பாட்டில் உள்ளது. கல்வராயன்மலையில் பெரியார் நீர்வீழ்ச்சி, படகு குழாம் உள்ளன. ஆனால், இவை மேம்படுத்தப்படாததால், சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
   கல்வராயன்மலை வனத்துறை பகுதியில் உள்ளதால், அடிப்படை சாலை வசதி, மின் வசதிகளுக்கு மலைவாழ் கிராம மக்கள் 50 ஆண்டுகளாகப் போராடி வந்தனர். மின்சார வசதியே தற்போதுதான் கிராமங்கள் பெற்றுள்ள நிலையில், சாலை வசதி படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
   கல்வராயன்மலை ஒன்றியத்தில் உள்ள 50 கிராமங்களில், 20 கிராமங்கள் பின்தங்கியே உள்ளன.
   வெள்ளிமலைக்கு மட்டும் பேருந்து வசதி உள்ளது. பிற பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை. கல்வி, தொழில் சாலை வசதிகள் இன்றி பின்தங்கியுள்ள கிராமங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. இங்குள்ள கூலித் தொழிலாளர்கள் சிலர் ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டச் சென்று, பாதிப்படைந்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
   கடுக்காய் தொழில்சாலை தேவை: மலைப்பகுதியில் மரவள்ளி, கடுக்காய் விவசாயம் பரவலாக உள்ளது. கடுக்காய் தொழில் சாலை வேண்டுமென்ற அவர்களது கோரிக்கை கிடப்பில் உள்ளது. மணிமுக்தா, கோமுகி அணைகள், இதன் வழியாக செல்லும் ஆறுகள், நெல், சோளம், கரும்பு, பருத்தி, மஞ்சள் விவசாயத்துக்கு கைகொடுத்து வருகின்றன. இருந்தபோதும், போதிய மழையின்மையால், ஆண்டு தோறும் கடுமையான குடிநீர் பிரச்னையை கள்ளக்குறிச்சி எதிர்கொள்கிறது.
   அரசு கலைக் கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு மருத்துவக்கல்லூரி, கள்ளக்குறிச்சிக்கான புதிய ரயில் பாதை இணைப்பு போன்றவற்றை இப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். வேலை வாய்ப்பை உருவாக்கும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் இல்லை. தினசரி வேலைவாய்ப்புகள், சந்தைகளுக்கு சேலம், விழுப்புரம் பகுதியைத் தான் நம்பியுள்ளனர். வேலைவாய்ப்புகளுக்கு பெருமளவில் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
   இதனால், வளர்ச்சியைப் பெற, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது. இதனை அதிமுக அரசு தற்போது அறிவித்திருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
   முதல்வரின் நேரடிப் பார்வையில்...: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன. ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளன. கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, சங்கராபுரம், சின்னசேலம் பகுதிகள் திமுகவும், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு பகுதிகள் அதிமுகவும் செல்வாக்கு பெற்றுள்ளன. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் நேரடிப் பார்வையில் உள்ளதாகக் கருதப்படும் இந்த மக்களவைத் தொகுதி அதிமுக தன்வசம் வைத்துள்ளது.
   இந்த மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலர் க.பொன்முடியின் மகன் பொன்.கௌதமசிகாமணி, திமுக கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ளார். இவருக்கு எதிராக அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக துணைச் செயலர் எல்.கே.சுதீஷ், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
   இதனால், பலமான போட்டி நிலவுகிறது. தேமுதிக தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும், அதிமுக, திமுகவுக்கு அடுத்த நிலையில் வாக்குகளை வாங்கி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. தற்போது, அதிமுக, பாமக கூட்டணியுடன் தேமுதிக களமிறங்குவதால், அக்கட்சி அதிக பலம் பெற்றிருப்பதாக கருதுகிறது.
   அதேவேளையில், அதிமுக இணையான பலத்துடன் காணப்படும் திமுக, தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளின் துணையுடன் பொன்.கெளதமசிகாமணியை வெற்றிபெறச் செய்ய தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த முறை டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோமுகி மணியன் களமிறங்குகிறார். இவர் அதிமுக வாக்குகளை கணிசமான அளவில் பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு பாதகமாகவும், திமுகவுக்கு சாதகமாகவும் அமையக் கூடும்.
   கூட்டணி பலம், வாக்குகள் பிரியும் நிலை என ஒரு புறம் இருந்தாலும், பிரசார வியூகங்களே இந்தத் தொகுதியில் கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.
   -இல.அன்பரசு.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai