Enable Javscript for better performance
மரக்காணம் அருகே நியாய விலைக் கடை முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    மரக்காணம் அருகே குடிமைப் பொருள்களை முறையாக வழங்காத நியாயவிலைக் கடையை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     மரக்காணம் அருகேயுள்ள ஆத்திக்குப்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
     இவர்கள் தங்களுக்கு வேண்டிய அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஊரணி கிராமத்தில் இயங்கும் நியாய விலைக்கடைக்கு சென்றுதான் வாங்கி வர வேண்டும்.
     இதனால் மாதந்தோறும் ரேஷன் பொருள்களை வாங்க இவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், ஆத்திக்குப்பம் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக, அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக ஆத்திக்குப்பம் மக்களுக்கு குடிமைப் பொருள்கள் முறையாக வழங்கபடவில்லையாம்.
     இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், ஆத்திக்குப்பம் கிராமத்திலேயே பகுதிநேர நியாய விலைக் கடை உடனடியாக அமைக்கவேண்டும், குடிமைப் பொருள்கள் வழங்குவதில் முறைகேடு செய்யும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, ஊரணி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீஸார், நிகழ்விடத்துக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால், சமாதானம் அடைந்த பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்துசென்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai