Enable Javscript for better performance
முதல்வர் பழனிசாமி வருகை: பாதுகாப்பு குறித்து டிஐஜி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் பழனிசாமி வருகை: பாதுகாப்பு குறித்து டிஐஜி ஆய்வு

    By  விழுப்புரம்/செஞ்சி,  |   Published on : 27th March 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள விழுப்புரம் மாவட்டத்துக்கு வருவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
     மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த வாரம் முதல் பிரசாரம் செய்து வருகிறார்.
     அவர், வருகிற 29 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வருகிறார். செஞ்சி, வல்லம், திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி, விழுப்புரம், கோலியனூர் ஆகிய 7 இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்து டிஐஜி சந்தோஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
     பிரசார இடங்களில் பாதுகாப்புப் பணியில் எவ்வளவு போலீஸாரை ஈடுபடுத்துவது, முதல்வர் வாகனம் செல்லும் வழிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்றவை குறித்து விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருடன் அவர் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஏடிஎஸ்பி முகிலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
     செஞ்சியிலும் ஆய்வு: ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து, வருகிற 29-ஆம் தேதி செஞ்சி கூட்டுச் சாலை, நாட்டார்மங்கலம் கூட்டுச்சாலை ஆகிய இரு இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
     முன்னதாக, வருகிற 28-ஆம் தேதி இரவு திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர், அன்றிரவு திருவண்ணாமலையில் தங்குகிறார்.
     மறுநாள் (மார்ச் 29) காலை 8 மணி அளவில் கீழ்பென்னாத்தூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். காலை 9 மணி அளவில் வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து, செஞ்சி கூட்டுச் சாலையில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அதனைத் தொடர்ந்து, மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாட்டார்மங்கலம் கூட்டுச் சாலையில் முதல்வர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
     முதல்வர் பிரசாரம் செய்யும் இடங்களை விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் சந்தோஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், செஞ்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் நீதிராஜ் ஆகியோர் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai