Enable Javscript for better performance
விழுப்புரம், கள்ளக்குறிச்சி அமமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி அமமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

    By DIN  |   Published on : 27th March 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மக்களவைத் (தனி) தொகுதி, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
     விழுப்புரம் தொகுதியில் அமமுக வேட்பாளரான அந்தக் கட்சியின் மாநில அமைப்புச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கணபதி, வேட்பு மனுக்கள் பெறப்படும் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
     இதற்காக, அவர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பகல் 12.30 மணியளவில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.பாலசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ சிவராஜ் ஆகியோர் தலைமையில் திறந்த வேனில் ஊர்வலமாகப் புறப்பட்டு வந்தார். உடன் கட்சி நிர்வாகிகள் சண்முகம், பொன்.சிவா, காளிதாஸ், வேட்பாளர் கணபதி மற்றும் ஏராளமான தொண்டர்கள் திருச்சி சாலை வழியாக, தேர்தல் அலுவலகமான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திரண்டு வந்தனர். இவர்களை, பெருந்திட்ட வளாகம் எதிரே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
     இதைத் தொடர்ந்து, வேட்பாளர் கணபதி உள்ளிட்ட சில நிர்வாகிகள் மட்டும் பிற்பகல் 1.30 மணிக்கு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மனு தாக்கல் செய்யவில்லை.
     கட்சிக்கு பொது சின்னம் வழங்கக் கோரும் மனு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புக்காக, கட்சித் தலைமை அறிவுறுத்தலின்படி வேட்பு மனு தாக்கல் செய்யாமல் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
     இதையடுத்து, பிற்பகல் 2.30 மணியளவில், வேட்பாளர் கணபதி, நிர்வாகிகள் 5 பேருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் இல.சுப்பிரமணியனிடம் சென்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
     கள்ளக்குறிச்சி தொகுதி: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மா.கோமுகிமணியன் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
     முன்னதாக, அவர் தியாகதுருகம் சாலையில் உள்ள அமமுக அலுவலகத்தில் இருந்து கூட்டணிக் கட்சியினருடன் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தார்.
     கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் அ.பிரபு, ஆத்தூர் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் மாதேஸ்வரன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல்மாலிக் உள்ளிட்ட பலரும் உடன் வந்தனர்.
     தொடர்ந்து, வேட்பாளர் மா.கோமுகி மணியன் கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவியிடம் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai