Enable Javscript for better performance
விழுப்புரம் தொகுதியில் 24 பேர் வேட்பு மனு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் (தனி) தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
     விழுப்புரம் தொகுதியில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து மார்ச் 19-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான இல.சுப்பிரமணியன் வேட்பு மனுக்களைப் பெற்று வருகிறார்.
     இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் எஸ்.வடிவேல்ராவணன், திமுக கூட்டணி சார்பில் விசிக வேட்பாளர் து.ரவிக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
     டி.பிரகலதா, பகுஜன் சமாஜ் கட்சி கோ.கலியமூர்த்தி, மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி, அகில இந்திய மக்கள் கழகம் சார்பில் ராஜா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
     பாமக வடிவேல் ராவணன் கூடுதலாக ஒரு மனுவும், அவருக்கு மாற்று வேட்பாளராக காளிதாஸ் ஒரு மனுவும், விசிக து.ரவிக்குமார் கூடுதலாக 3 மனுக்களும், பகுஜன் சமாஜ்
     கலியமூர்த்தி, நாம் தமிழர் கட்சி பிரகலதா ஆகியோர் கூடுதலாக ஒரு மனுவும், மக்கள் நீதிமய்யம் அன்பின் பொய்யாமொழிக்கு மாற்றாக அவரது மனைவி கனிமொழியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதே போல, கே.அரசன், விஸ்வநாதன் ஆகியோர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மூலம் 15 பேர் வேட்பு மனு அளித்திருந்தனர்.
     வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, அமமுக வேட்பாளர் கணபதி, வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து, தமிழ்நாடு இளைஞர் கட்சி அபிராமி, சுயேச்சைகளாக எம்.ராஜசேகரன், வி.இளமுருகன், தி.அன்பழகன், ம.குமரேசன், த.வடிவேல், தேசிங்கு, எம்.கதிர்வேல், எஸ்.ஜெயபாரதி, சாந்தகுமார், சின்னதுரை, மாரீஸ்வரி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
     இதன் மூலம், விழுப்புரம் தனி தொகுதியில், போட்டியிடுவதற்கு பாமக, விசிக, பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் ஆகிய அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகள் உள்ளிட்ட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
     இதில், வேட்பாளர்கள் சிலர் ஒரே பெயரில் கூடுதல் விண்ணப்பங்களை வழங்கியுள்ளதால், மொத்தம் 30 வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. ஏப்.29-ஆம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அன்று மாலை வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளது.
     கள்ளக்குறிச்சியில் 45 பேர் வேட்பு மனு : கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 45 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
     கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த 19ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றனர். மனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றது.
     கள்ளக்குறிச்சி தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், திமுக வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேசிய மக்கள் கழகம், அமமுக, சுயேச்சைகள் என மொத்தம் 45 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai