Enable Javscript for better performance
விழுப்புரம் தொகுதி: 16 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு; விசிக வேட்பாளர் மீது பாமக புகார்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் தொகுதி: 16 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு; விசிக வேட்பாளர் மீது பாமக புகார்

    By DIN  |   Published on : 28th March 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களவைத் தொகுதி வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, விசிக வேட்பாளர் மீது பாமகவினர் விதிமீறல் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், விசிக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 16 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
     விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான இல.சுப்பிரமணியன், தேர்தல் பார்வையாளர் மொகிந்தர்பால் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
     இந்தத் தொகுதிக்கு 30 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களது மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து, வேட்பாளருக்கு முன்மொழிந்தவர்களின் விவரம், வைப்புத் தொகை, சாதிச் சான்றிதழ், கட்சிகள் வழங்கிய அங்கீகாரக் கடிதம், சொத்து மதிப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, சரியாக இருந்தவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
     பாமக புகாரால் பரபரப்பு: அப்போது, திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார், தவறான தகவல் அளித்துள்ளதாக, பாமக வேட்பாளரின் பிரதிநிதி வழக்குரைஞர் பாலாஜி புகார் தெரிவித்தார். இதற்கு, திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் விதிகள் படி, பின்னர் விசாரிக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்.
     16 மனுக்கள் நிராகரிப்பு: விழுப்புரம் தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பாமக வேட்பாளர் எஸ்.வடிவேல்ராவணன், விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி கோ.கலியமூர்த்தி, நாம் தமிழர் கட்சி டி.பிரகலதா, மக்கள் நீதி மய்யம் அன்பின் பொய்யாமொழி, அகில இந்திய மக்கள் கழகம் செ.ராஜா, தமிழ்நாடு இளைஞர் கட்சி
     பி.அபிராமி மற்றும் 7 சுயேச்சைகள் உள்ளிட்ட 14 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
     இதையடுத்து வெளியே வந்த பாமக பிரதிநிதியான, வழக்குரைஞர் பாலாஜி கூறியதாவது: திமுகவின் சின்னத்தில் வேட்பாளராகப் போட்டியிடும் துரை.ரவிக்குமார், விசிக பொதுச் செயலராக உள்ளார். பத்திரிகையிலும் அதுகுறித்து விரிவாகப் பேட்டி கொடுத்துள்ளார். ஆனால், திமுகவில் உறுப்பினராக உள்ளதாக வேட்பு மனுவில் தவறானத் தகவலை கொடுத்துள்ளார். அதனை பரிசீலனை செய்யக் கோரினோம். மாவட்ட தேர்தல் அலுவலரோ, அதனை பரிசீலனை செய்யாமலேயே ஒருதலைபட்சமாக, வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டார்.
     இதுதொடர்பாக, தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் அளிப்போம் என்றார்.
     இது குறித்து, விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார் கூறியதாவது: வேட்பு மனுவில் இடம்பெற்ற தகவல்கள், அளிக்கப்பட்ட ஆவணங்களை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்த பிறகே, எனது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டுள்ளார் என்றார்.
     அமமுகவின் கோரிக்கை நிராகரிப்பு: வேட்பு மனு பரிசீலனையின்போது, அமமுக வேட்பாளர் என்.கணபதி மற்றும் அவரது பிரதிநிதிகள், தங்களுக்கு பொது சின்னம் வழங்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை காட்டி வலியுறுத்தினர்.
     இதற்கு பதிலளித்த, தேர்தல் அலுவலர் இல.சுப்பிரமணியன், தேர்தல் ஆணையத்திலிருந்து எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை, வந்தால்தான் பரிசீலிக்க முடியும் என்றார். இதனையடுத்து, அமமுக வேட்பாளரின் மனு, சுயேச்சை மனுவாக ஏற்கப்பட்டது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai