Enable Javscript for better performance
விழுப்புரம் மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள், ரௌடிகள் 900 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள், ரௌடிகள் 900 பேர் கைது

    By DIN  |   Published on : 28th March 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பழைய குற்றவாளிகள், ரௌடிகள் என மொத்தம் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
     விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் 1,659 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 3,234 வாக்குப் பதிவு மையங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது.
     மாவட்டத்தில் வாக்குப் பதிவு மையங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, போலீஸாரின் எண்ணிக்கை குறைவு. ஏனெனில், மாவட்டத்தில் சுமார் 2,700 போலீஸார் மட்டும் உள்ளனர். மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், வாக்குப் பதிவு முடிந்து மீண்டும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு இயந்திரங்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும் போலீஸார் தேவை உள்ளது.
     இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டுமானால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது. அதற்காக, தாக்குதல் நடத்தி பணம் பறிப்பில் ஈடுபட்டவர்கள், வழிப்பறி செய்தவர்கள் போன்ற பழைய குற்றவாளிகள் குறித்த விவரங்களை காவல் துறை திரட்டியது. அதேபோல, ரெடிகள், தேர்தல் நேரத்தில் பிரச்னையில் ஈடுபட்ட ஆள்கள், கடந்த சில ஆண்டுகளில் இரு பிரிவினரிடையேயான மோதல்களில் தொடர்புடையவர்கள் விவரங்கள் தயார் செய்யப்பட்டன. அந்த நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் நடவடிக்கையில் மாவட்ட காவல்துறை இறங்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குப் பதிவு மையங்களை முழு பாதுகாப்பில் கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
     மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107, 109, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் 908 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக அண்மைக் காலத்தில் இரு பிரிவினரிடையே தகராறில் ஈடுபட்டு வழக்குகளில் தொடர்புடைய 20 பேர், தாக்குதல், வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 142 ரௌடிகள், தேர்தலின்போது தகராறில் ஈடுபட வாய்ப்புள்ளவர்கள் 746 பேர் கைது செய்யப்பட்டனர். பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 91 வாக்குச்சாவடி பகுதிகளுக்கு உள்பட்ட இடங்களில் மட்டும் 202 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்.
     தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு காவல்துறையினர் மட்டுமில்லாமல் துணை ராணுவப் படையினர், ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற போலீஸார் போன்றவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் இல்லாமல் 1,500 பேர் தேவை உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தலின்போது விழுப்புரம் மாவட்டத்துக்கு 8 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த ஆண்டும், அதே போன்று துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு வரவாய்ப்புள்ளது. துணை ராணுவத்தினர் வந்தால், ஒரே இடத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள வாக்குப்பதிவு இடங்களில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். பதற்றமான வாக்குச்சாடிகளிலும் துணை ராணுவத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai