சமுதாயக் கூடத்தை ஆக்கிரமித்து இயங்கும் தனியார் பயிற்சி மையம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

விழுப்புரம் அருகே அரசு சமுதாயக் கூடத்தை ஆக்கிரமித்து ஓராண்டுக்கும் மேலாக இயங்கும் தனியார் பயிற்சி மையத்தை காலி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே அரசு சமுதாயக் கூடத்தை ஆக்கிரமித்து ஓராண்டுக்கும் மேலாக இயங்கும் தனியார் பயிற்சி மையத்தை காலி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 விழுப்புரம் அருகே காணை ஒன்றியத்துக்கு உள்பட்ட கொத்தமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடம் கடந்த 2015-இல் கட்டப்பட்டது. சமுதாயக் கூடமாக கட்டப்பட்டு, கிராம மக்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு குறைந்த வாடகையில் பயன்படுத்த வழங்கப்பட்டது.
 இந்த நிலையில், அரசுக்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தில், தனியார் பயிற்சி மையத்தினர் ஆக்கிரமித்து காலி செய்ய மறுத்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். புதன்கிழமை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமும் அதிகாரிகளின் குழுவில் பதிவைப் போட்டு வலியுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கிராமத்துக்கு அரசு சார்பில் கட்டிக்கொடுத்துள்ள சமுதாயக் கூடத்தை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இருவர் வாங்கி பயிற்சி வகுப்புகள் நடத்தினர். நாளடைவில், சமுதாயக் கூடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இரவும் பகலும் தங்கியபடி உள்ளனர்.
 இதில், கொத்தமங்கலம், தெளி, வெண்மணியாத்தூர், கோனூர் கிராம இளைஞர்கள் சிலர் படிக்கின்றனர். கட்டணம் வசூலித்தே பயிற்சி வகுப்பு நடத்தி வரும் இவர்கள், சமுதாயக் கூடத்தை காலி செய்ய மறுக்கின்றனர். இது தொடர்பாக, நாங்கள் ஊராட்சிச் செயலர், காணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை புகார் தெரிவித்தும் பலனில்லை.
 இரண்டு ஆண்டுகளாக, பயிற்சி மையத்துக்காக ஆக்கிரமித்துக்கொண்டு, கட்டணமும் செலுத்தாமல் அரசு கட்டடத்தை பயன்படுத்துகின்றனர்.
 இதனால், கிராம ஏழை மக்கள் சுபகாரியங்களுக்கு பயன்படுத்த முடியவில்லை. இதனால், பிரச்னை வரும் சூழலும் ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சமுதாயக் கூடத்தை அனைத்து மக்களும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 இதுகுறித்து கொத்தமங்கலம் ஊராட்சிச் செயலர் குமரனிடம் கேட்டபோது, அரசு சார்பிலான பொது சமுதாயக்கூட கட்டடம் தான் இது. காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்துவதாக அனுமதி கேட்டு வந்த இளைஞர்கள், தொடர்ச்சியாக அந்தக் கட்டடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பிரச்னை எழுந்ததால், காலி செய்யுமாறு, சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
 வாடகையும் அவர்களிடம் வசூலிக்கவில்லை. இடையே இரண்டு முறை சமுதாயக் கூடத்தை பூட்டி, சாவியை காணை வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் கொடுத்துவிட்டேன். மீண்டும் அவர்கள் வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர்.
 தற்போது, பொது மக்கள் தரப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், வட்டார வளர்ச்சி அலுவலர், காலி செய்யுமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
 ஜூன் மாதத்தில் காவலர் தேர்வு முடிந்தவுடன், காலி செய்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com