சங்கராபுரத்தில் சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரிக்கை

சங்கராபுரத்தில் பெரும்பாலான பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

சங்கராபுரத்தில் பெரும்பாலான பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தினமும், சீரான குடிநீர் விநியோகம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மொத்தம் 15 வார்டுகளைக் கொண்ட சங்கராபுரம் பேரூராட்சியில் மக்களின் தேவைக்காக 7 குடிநீர் கிணறுகளும், 5 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 
கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை சரிவர பெய்யாததால், இந்தக் குடிநீர் கிணறுகளில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றப்படும் பிரதான குழாய்களில் இருந்து கள்ளக்குறிச்சி சாலை, பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் நேரடியாக குடிநீர் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. 
 இதுதவிர, பிரதான குழாய்களில் இருந்து முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சிலரது வீடுகள், அவர்களது வணிக நிறுவனங்களுக்கும் தினமும் நேரடியாக குடிநீர் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், மற்ற பகுதிகளுக்கு தினமும் விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர், தற்போது 15 நாள்களுக்கு ஒருமுறைதான் விநியோகிக்கப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். குடிநீர் சீராக விநியோகிக்காத நிலையில், ரூ.30-க்கு கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட 
குடிநீர் வாங்கி பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். குடிநீர்த் தேவையை விட மற்ற பயன்பாடுகளுக்காக, தனியார் குடிநீர் வாகனங்களில் தினமும் குறைந்தபட்சம் ரூ.ஆயிரம் செலுத்தி இரண்டாயிரம் லிட்டர் தண்ணீர் பெறுகின்றனர். குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக, இப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறியதாவது: கடந்த 1991-ஆம் ஆண்டு சுந்தரேசபுரம்-சின்னசேலம் மற்றும் மணலூர்பேட்டை-சின்னசேலம் ஆகிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்துடன் சங்கராபுரம் பகுதியை இணைப்பதாக முதலில் சொல்லப்பட்டது. பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது.  அதன்பின், பதவிகளுக்கு வந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ, சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களோ அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. 
கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான ப.மோகன், சங்கராபுரம் பகுதியை கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துடன் இணைப்பதாக வாக்குறுதித் தந்தார். அதுவும், நிறைவேறாமல் போய்விட்டது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாகவே சங்கராபுரம் பேரூராட்சியில் பொறுப்பு செயல் அலுவலர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். நிரந்தர செயல் அலுவலர் யாரும் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், சங்கராபுரம் பகுதியை கொள்ளிடம் உள்ளிட்ட ஏதாவது ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டத்துடன் இணைக்க வேண்டும். இல்லையெனில், குடிநீர் ஆதாரமாகத் திகழும் ஏரியில், நிலத்தடி நீரை உயர்த்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, போதிய அளவுக்கு ஆழப்படுத்தி, தினமும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
 பேரூராட்சி அலுவலகத்துக்கு நிரந்தர செயல் அலுவலரை உடனடியாக நியமிக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com