விழுப்புரம் மாவட்டத்தில் பசுந்தீவனப்புல் விற்பனை தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் மேய்ச்சலுக்கு இடமின்றி பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கான பசுந்தீவனப்புல் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் மேய்ச்சலுக்கு இடமின்றி பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கான பசுந்தீவனப்புல் 
விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில்,  நிகழாண்டு போதிய மழையின்மையால் வறட்சி நிலவுகிறது. ஆறுகள்,  அணைகளில் நீராதாரம் இன்றி, நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து வருகிறது. குளம்,  குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன.  பல இடங்களில் குடிநீர் ஆதாரமின்றி பொது மக்களே தவிக்கும் நிலையில், ஆடு, மாடுகளோ போதிய தண்ணீரின்றியும் மேய்ச்சலுக்கு இடமின்றியும் அவதிப்பட்டு வருகின்றன. விவசாய நிலங்களிலும் வறட்சியால் புல்கூட முளைக்காமல் போயுள்ளன. இதனால்,  தண்ணீர் வற்றிய ஏரிகள்,  பயிரிட்டுள்ள விவசாய நிலங்களின் வரப்புகளில் மாடுகளை மேய்த்து, விவசாயிகள் சமாளித்து வருகின்றனர்.
வைக்கோல் தட்டுப்பாடு: மாடுகளுக்கு வழங்கப்படும் வைக்கோலுக்கும், பருவமழையின்மையால் நெல் சாகுபடி பாதித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  சேலம்,  ஓசூர்,  திருவண்ணாமலை போன்ற பகுதிகளிலிருந்து வைக்கோல் வாங்கி வந்து மாடுகளுக்கு அளிக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையை சமாளிக்கும் பொருட்டு, உள்ளூரில் "மஞ்சம் புல்' என்றழைக்கப்படும், பசுந்தீவனப்புல் வளர்க்கப்பட்டு, கால்நடை 
வளர்ப்போருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
விழுப்புரம் அருகே காகுப்பம்,  பொய்யப்பாக்கம் கிராமப்பகுதியில் இந்த புல் வகை உற்பத்தி செய்யப்படுகிறது.
பசுந்தீவனப்புல் உற்பத்தி: அப்பகுதிகளில் 20 ஏக்கர் அளவில் நீண்டகாலமாக விவசாயிகள் பசுந்தீவனப் புல் வளர்த்து வருகின்றனர். இதுகுறித்து காகுப்பம் விவசாயி செல்வராஜ் கூறியதாவது:  இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மஞ்சம் புல் உற்பத்தி செய்கிறோம்.  
இந்த புல் உற்பத்திக்கு குறைந்தளவு தண்ணீர் இருந்தால் போதும். ஒருமுறை இதற்கான புல்கரணையை நடவு செய்தால்,  60 நாள்களில் புல் வளர்ந்து, செழிப்பாக உற்பத்தியாகும்.  இதன் பிறகு,  தொடர்ச்சியாக புல்லை அறுவடை செய்து, தினமும் வளர்ச்சிக்கேற்றபடி விற்பனை செய்து வருகிறோம்.
புல் செழித்து வளர்வதற்காக, தேவைக்கேற்ப யூரியா உரம் இடுகிறோம். ஒரு கட்டு புல் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.இந்த பசுந்தீவனப்புல் உற்பத்திக்கு பருவகாலம் கிடையாது.  எந்த காலத்திலும் வளர்ந்து கொண்டே இருக்கும். தொடர்ச்சியாக, 45 நாள் அறுவடை செய்து விற்பனை செய்யலாம்.  
பிறகு, புல் கரணைகளை அறுத்துவிட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சிறிது நாள்கள் கழித்து மீண்டும் வளர்ந்து வரும் பசும்புல்லை விற்பனைக்கு வழங்கலாம். களை அகற்றுதல், தண்ணீர் பாய்ச்சுதல் பணிகளை செய்ய வேண்டும் என்றார். காலை 6 மணி முதல் 8 மணி வரையும்,  மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பசுந்தீவனப்புல்லை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.  
கோடை வெயில், வறட்சி காரணமாக தற்போது விற்பனை அதிகமாக உள்ளது. இவற்றை விழுப்புரம் மட்டுமல்லாது வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதே போல, விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அடிப்படையில், ஆடு,  மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் தங்கள் சொந்த தேவைகளுக்காக,  ஓரிரு ஏக்கர் பரப்பில் கள்ளக்குறிச்சி,  சின்னசேலம்,  தியாகதுருகம்,  மேல்மலையனூர்,  அவலூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பசுந்தீவனப்புல்லை பயிரிட்டு வருகின்றனர்.  இவர்கள்,  தங்கள் தேவைக்கு அதிகமானவற்றை பிற விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக,  நிலங்களில் பகுதியளவு பசுந்தீவனப்புல் உற்பத்தி செய்து பயன்பெற வேளாண் அலுவலர்களும் ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com