செஞ்சி அருகேமுக்தி அடைந்தார் சமண பெண் துறவி
By DIN | Published On : 05th May 2019 05:41 AM | Last Updated : 05th May 2019 05:41 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சித்தாமூர் கிராமத்தில் உண்ணா நோன்பு இருந்த சமண பெண் துறவி வெள்ளிக்கிழமை இரவு முக்தி அடைந்தார்.
மேல்சித்தாமூர் கிராமத்தில் சமண மதத்தைச் சேர்ந்த 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஜினகஞ்சி மடம், பார்சுவநாதர், மல்லி நாதர் கோயில்கள் அமைந்துள்ளன. பார்சுவநாதர் கோயில் தேர்த் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள கர்நாடக மாநிலம், ஹிவாரி பகுதியைச் சேர்ந்த சமண மத பெண் துறவி சுப்ரமத்பிரபாவதி (65) வந்தார். இவர், கடந்த 2012-இல் குடும்ப வாழ்க்கையை துறந்து துறவம் மேற்கொண்டு மாதாஜியாக தீட்சை பெற்றார்.
இந்த நிலையில், கடந்த 27 நாள்களாக மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடத்தில் சுப்ரமத்பிரபாவதி வடக்கு நோக்கி தலை வைத்து படித்திருந்தபடி உண்ணா நோன்பு மேற்கொண்டார். வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணிக்கு அவர் முக்தி அடைந்தார். சனிக்கிழமை காலை சமண சமய நெறிமுறைப்படி, சுப்ரமத்பிரபாவதிக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...