கள்ளக்குறிச்சி பகுதியில் 5 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு அரசு நகர்ப் பேருந்து உள்பட 5 பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் சனிக்கிழமை நள்ளிரவு கற்களை வீசி உடைத்தனர்.


விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு அரசு நகர்ப் பேருந்து உள்பட 5 பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் சனிக்கிழமை நள்ளிரவு கற்களை வீசி உடைத்தனர்.
கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை புறவழிச் சாலையில் சென்னை நோக்கிச் சென்ற 3  தனியார் சொகுசுப் பேருந்துகளின் மீது மர்ம நபர்கள் சனிக்கிழமை நள்ளிரவு கற்களை வீசியதில் கண்ணாடிகள் உடைந்தன.
அதிகாலை 3.30 மணிக்கு தென்கீரனூர் பாலம்  அருகே ஒரு சொகுசுப் பேருந்தின் கண்ணாடி மீது மர்ம நபர் கற்களை வீசி உடைத்தார். இதையடுத்து, பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் பேருந்திலிருந்த பயணிகள் இறங்கி அந்த நபரை பிடிக்க முயன்றனர். எனினும், அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் தயார் நிலையில் இருந்த மற்றொருவருடன் தப்பிச் சென்றுவிட்டார்.
இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் பகுதியில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து பால்ராம்பட்டுக்குச் சென்ற அரசு நகர்ப் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல் வீசியதில் கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவங்களில் பேருந்துகளின் ஓட்டுநர்கள், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார், காவல் உதவி ஆய்வாளர் சூ.பாலமுரளி, வீ.வினோத்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு, எதற்காக பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை மாலை சம்பவ இடங்களை பார்வையிட்டு, விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யுமாறு போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com