திண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாற்று இடம் வழங்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
By DIN | Published On : 07th May 2019 08:53 AM | Last Updated : 07th May 2019 08:53 AM | அ+அ அ- |

திண்டிவனத்தில் மேம்பாலத்தின் கீழ் இருந்த கடைகள் அகற்றப்பட்டதற்கு மாற்று இடம் வழங்கக் கோரி, சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, திண்டிவனத்தைச் சேர்ந்த ஏ.பாலன், சாந்தி ஆகியோர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் அளித்த மனு: திண்டிவனம் நகரம் பல ஆண்டுகளாக வளர்ச்சி பெறாமல் உள்ளது. இங்கு, மிகப்பெரிய மேம்பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த பாலம் கட்டப்பட்ட பிறகு பேருந்துகள் எதுவும் இந்திரா காந்தி பேருந்து நிலையத்துக்கு வருவதில்லை. இதனால், பேருந்து நிலையப் பகுதி பயன்பாடின்றி உள்ளது.
இதையடுத்து, மாற்று இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் ஆய்வு செய்து 2 இடங்களைத் தேர்வு செய்தனர். ஆனால், அந்த இடங்களில் பேருந்து நிலையத்தை அமைக்கக் கூடாதென சிலர் வழக்கு தொடுத்ததால் அந்தப் பணி கிடப்பில் உள்ளது. பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருந்த சிறு வியாபாரிகள் கடந்த 35 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தி வியாபாரம் செய்து வந்தும், மாற்று இடம் வழங்காமல் இருந்தது.
மாற்று இடத்தை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தும் நீண்ட காலமாக எதுவும் செய்யவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட வியாபாரிகள், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழாக போக்குவரத்துக்கு பாதிப்பின்றி கடைகளை வைத்து பிழைத்து வந்தனர். அதிகாரிகளும் இதை அனுமதித்து வந்தனர்.
இந்த நிலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றிவிட்டனர். இதற்குப் பதிலாக மாற்று இடம் தருவதாக தெரிவித்த அதிகாரிகள், தற்போது சந்தைமேடு பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், சிறிய அளவில் நிலம் அளிப்பது பயன்தராது. இதனால் அதை வியாபாரிகள் ஏற்கவில்லை.
எனவே, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி, புதிய பேருந்து நிலையம் அமைக்கும் வரை, இந்திராகாந்தி பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலைய காலியிடங்களில், தற்காலிகமாக கடைகள் வைத்து நடத்திட அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனர்.