விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்தளவு தபால் வாக்குகள் பதிவு: அரசியல் கட்சிகள் அதிருப்தி
By DIN | Published On : 16th May 2019 08:50 AM | Last Updated : 16th May 2019 08:50 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட 12,069 தபால் வாக்குகளில், 8,514 தபால் வாக்குகள் வரை தற்போது வந்துள்ளன. எஞ்சியுள்ள வாக்குகள் இதுவரை வராததால் அரசியல் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்.18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி ஆகிய மக்களவைத் தொகுதிகளில், 15 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரை தேர்தல் பணியில் கலந்துகொண்டனர். அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுவோர்களின் வாக்குகள் விடுபடக் கூடாது என்ற நோக்கத்தில், வழக்கம் போல் தபால் வாக்குகளும், பணிபுரியும் வாக்குச் சாவடிகளில் நேரடியாக வாக்களிப்பதற்கான (இ.டி.சி) அனுமதியும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தேர்தல் பணியாற்றிய பெரும்பாலான ஊழியர்கள் தபால் வாக்குகள் கோரியிருந்த நிலையில், பலருக்கு தபால் வாக்குகள் வந்து சேரவில்லை என்று, திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் கடந்த சில நாள்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் 14,325 பேர் தபால் வாக்குகள் கேட்டிருந்த நிலையில், 8,094 பேர் தான் தபால் வாக்கு அளித்துள்ளனர். 2,251 பேர் நேரடியாக வாக்களித்துள்ளனர். 4,000 தபால் வாக்குகள் வரவில்லை. விழுப்புரம் தொகுதியில், 13,903 பேர் கேட்டிருந்த நிலையில், 6,613 தபால் வாக்குகள் தான் வந்துள்ளன. 4,351 பேர் நேரடியாக வாக்களித்துள்ளனர். 3,000 தபால் வாக்குகள் வரை வராமல் உள்ளதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தபால் வாக்கு நிலவரம் குறித்து, அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களில் 23,935 பேர் வரை வாக்களிக்க அனுமதி கோரியிருந்தனர். இவர்களில், 12,069 பேர் தபால் வாக்குகளை கோரியிருந்த நிலையில் 8,514 பேர் தபால் வாக்குகளைப் பெற்று செலுத்தியுள்ளனர். 7,090 பேர், அவர்கள் பணியாற்றிய வாக்குச் சாவடிகளிலேயே தேர்தல் பணி ஆணை பெற்று வாக்கை செலுத்தியுள்ளனர்.
இதில், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், 10,143 பேர் வரை தபால் வாக்குகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 6,613 பேர் தபால் வாக்குகள் பெற்று, அதிலிருந்து, 3,403 பேர் பூர்த்தி செய்து செலுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 5 ஆயிரத்து 325 பேர் வரை தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே ஏப்.7-ஆம் தேதி நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பின் போது தனிப் பெட்டிகள் வைத்து தபால் வாக்குகள் பெறப்பட்டன. ஏப்.12-ஆம் தேதி காவலர்களுக்கான தபால் வாக்குகள் பெறப்பட்டன. தொடர்ந்து ஏப்.13-ஆம் தேதியும், ஏப்.17-ஆம் தேதியும் தபால் வாக்குகள் தனி பெட்டிகள் வைத்து பெறப்பட்டன.
இதையடுத்து, அஞ்சல் துறை மூலமாக தபால் வாக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், தொடர்ச்சியாக தபால்கள் மூலம், அந்தந்த தேர்தல் அலுவலகத்தில் தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மே 23 ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குகள் கிடைப்பதற்கு அவகாசம் உள்ளதால், எஞ்சியவர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருவதாக தெரிவித்தனர்.