Enable Javscript for better performance
மரக்காணம் அருகே 8 பேருந்துகள் மீது கல் வீச்சு: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மரக்காணம் அருகே 8 பேருந்துகள் மீது கல் வீச்சு: இளைஞர் கைது

    By DIN  |   Published on : 17th May 2019 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் மரக்காணம், சூனாம்பேடு பகுதிகளில் 8 பேருந்துகள் மீது சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் வியாழக்கிழமை அதிகாலை கற்களை வீசித் தாக்கினர். இவர்களில், ஒருவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     சென்னை - புதுவை கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு பைக்கில் சென்ற இளைஞர்கள் சிலர் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள நாராவாக்கம் கிராமத்தின் அருகே சென்ற போது, எதிரே சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த 2 அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் சொகுசுப் பேருந்தின் மீது கற்களை வீசித் தாக்கினர். மது போதையில் இருந்த அவர்கள், பேருந்துகள் மீது கண்மூடித்தனமாக கற்களை வீசிவிட்டு, ஆபாசமாக பேசியபடி சென்றனர்.
     பேருந்துகள் நிறுத்தம்: கண்ணாடிகள் உடைந்ததால், பேருந்துகளை நிறுத்திவிட்டு, மரக்காணம் போலீஸாருக்கு ஓட்டுநர்கள் தகவல் தெரிவித்தனர். மரக்காணம் காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
     அப்போது, 2 பைக்குகளில் சென்ற இளைஞர்கள் தாக்குதல் நடத்திவிட்டு சென்றதாகக் கூறப்பட்டதால், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
     இதனிடையே, தொடர்ந்து பைக்கில் சென்ற அந்த நபர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ள வெண்ணாங்குப்பட்டு பகுதியில் சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த 5 அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசிச் சென்றனர். இவற்றில் 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. 3 பேருந்துகளின் கண்ணாடிகளில் கீறல் விழுந்தன.
     இதனிடையே, மாமமல்லபுரம் போலீஸார் கிழக்கு கடற்கரை சாலையில் சோதனை நடத்தியபோது, அந்த வழியாக பைக்கில் வந்த நபர்களை நிறுத்த முயன்றபோது, அவர்கள் நிற்காமல் சென்றதால், விரட்டிச் சென்றனர்.
     ஒருவர் கைது: அப்போது, பைக்கிலிருந்து கீழே விழுந்த ஒருவர் மட்டும் பிடிபட்டார். இருவர் தப்பியோடிவிட்டனர்.
     இதையடுத்து, மரக்காணம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூனாம்பேடு போலீஸாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமதுஆஷீப் (22) என்பதும், இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான மணி (25), சரவணன் (22) ஆகியோர் பைக்கில் புதுச்சேரிக்கு வந்து மது அருந்திவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் எதிரே வந்த 8 பேருந்துகள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததும் தெரிய வந்தது.
     இதுகுறித்து மரக்காணம், சூனாம்பேடு போலீஸார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர். முகமது ஆஷீபை சூனாம்பேடு போலீஸார் கைது செய்து, அவரது பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     பயணிகள் கடும் அவதி
     சென்னை - புதுவை கிழக்கு கடற்கரைச் சாலையில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மது போதையில் 8 பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்துச் சென்றதால், மரக்காணம், சூனாம்பேடு பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
     பேருந்துகளில் வந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிகாலை நேரத்தில் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர்.
     விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - கோட்டக்குப்பம் இடையே ரோந்து வாகனங்கள் மற்றும் சோதனைச் சாவடியில் உள்ள போலீஸார் மது போதையில் சென்ற இளைஞர்களை கண்காணிக்காமல் விட்டதால், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
     எனவே, போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai