ஒரே குடும்பத்தில் மூவர் இறந்த விவகாரம்: கொலை செய்யப்பட்டனரா என விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில்,
ஒரே குடும்பத்தில் மூவர் இறந்த விவகாரம்: கொலை செய்யப்பட்டனரா என விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இறந்த ஒருவரின் தலையில் ரத்தக் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 திண்டிவனம் காவேரிபாக்கம் சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர் ராஜி (60). இவரது மனைவி கலைச்செல்வி (52), இளைய மகன் கௌதமன் (27).
 இவர்கள் மூவரும் தங்களது வீட்டில் உள்ள ஓர் அறையில் தூங்கினர். பக்கத்து அறையில் ராஜியின் மூத்த மகன் கோவர்த்தனன் தனது மனைவி காயத்ரியுடன் தூங்கினார்.
 இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை ராஜி உள்ளிட்ட மூவரும் தூங்கிய அறையில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியதில் மூவரும் உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 ராஜி, கலைச்செல்வி, கெளதமன் ஆகியோரின் சடலங்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே, சம்பவம் நடைபெற்ற வீட்டை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி உத்தரவின்பேரில், ஆய்வாளர் சீனிபாபு, ராஜியின் மூத்த மகனான கோவர்த்தனனை திண்டிவனம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
 மேலும், குளிர்சாதனப் பெட்டியில் தீப்பற்றியதாகக் கூறப்படும் நிலையில், அந்த இயந்திரத்தை மெக்கானிக் மூலம் போலீஸார் பரிசோதனை செய்தனர்.
 இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது: கெளதமன் தீக்காயத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது தலையில் ரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com