முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மனைவியைக் கொன்ற கணவர் கைது
By DIN | Published On : 18th May 2019 08:05 AM | Last Updated : 18th May 2019 08:05 AM | அ+அ அ- |

மூங்கில்துறைப்பட்டு அருகே மனைவியின் தலையில் அம்மிக் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்றதாக கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டை அடுத்த பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (40). கொத்தனார். இவரது மனைவி ராஜாத்தி (38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அன்றிரவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்த போது, சந்திரன் மனைவி ராஜாத்தி மீது, அம்மிக்
கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சந்திரன் அங்கிருந்து தப்பியோடி விட்டாராம்.
வெள்ளிக்கிழமை ராஜாத்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், வடபொன்பரப்பி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, ராஜாத்தியின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான சந்திரனை தேடினர். பின்னர், அதே பகுதியில் பதுங்கியிருந்த சந்திரனை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.