2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 18th May 2019 08:04 AM | Last Updated : 18th May 2019 08:04 AM | அ+அ அ- |

திருக்கோவிலூர் அருகே 2 பெண் குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருக்கோவிலூரை அடுத்துள்ள கீழக்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (40). விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு தனுஷ் (6), அர்ச்சனா (4), ஈஷா (3) ஆகிய மூன்று குழந்தைகள்.
தனலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாம். ஆனால், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லையாம். இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்தாராம்.
இந்த நிலையில், அதே பகுதியில் அவர்களுக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் வியாழக்கிழமை இரவு அர்ச்சனா, ஈஷா ஆகிய 2 பெண் குழந்தைகளுடன் தனலட்சுமி கிடந்தாராம்.
இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, குழந்தைகள் தண்ணீர் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. மேலும், தனலட்சுமி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இதையடுத்து, குழந்தைகளின் சடலங்களை மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்தனர்.
தனலட்சுமி இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு யாராவது அவர்களை கிணற்றில் தள்ளிவிட்டார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.