தெருமின் விளக்குகள் அமைக்கப்படுமா?
By DIN | Published On : 20th May 2019 08:49 AM | Last Updated : 20th May 2019 08:49 AM | அ+அ அ- |

திருக்கோவிலூர் நகரில் தெருமின் கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட என்ஜிஜிஓ நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவில் இருந்து சுதந்திர நினைவு சங்கம் வழியாக நான்குமுனைச் சந்திப்புக்குச் செல்லும் பிரதான தெருச்சாலை உள்ளது.
திருவள்ளுவர் தெருவில் வசிப்போர் மட்டுமல்லாமல் என்ஜிஜிஓ நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனை, பாரத ஸ்டேட் வங்கி, ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம், மின் வாரிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு இந்தத் தெரு வழியாகத்தான் செல்கின்றனர்.
இந்தத் தெருவில் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் ஏதும் அமைக்கப்படாததால், இரவு நேரத்தில் இந்தத் தெரு வழியாக செல்ல முடியாமல் மக்கள் அவதியடைகின்றனர்.
எனவே, இந்தத் தெருவில் உள்ள மின் கம்பங்களில் புதிதாக விளக்குகளை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.