படைப்புழு விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 20th May 2019 08:50 AM | Last Updated : 20th May 2019 08:50 AM | அ+அ அ- |

திருக்கோவிலூர் அருகே ஆயந்தூர், சென்னகுணம் ஆகிய கிராமங்களில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கனகலிங்கம் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் ஆனந்தஜோதி முன்னிலை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் புகழேந்தி வரவேற்றார்.
முகாமில் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியா, திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது, கோடையில் உழவு செய்வதன் மூலம் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறிகளை வைத்தும் இந்தப் புழுவை அழிக்கலாம். மேலும், நுண்ணுயிர் பூச்சிக் கொல்லிகளான பிவேரியா, பேசியானா, மெட்டாரைசியம், அனிசோபிலி, முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிரம்மா ஆகியவற்றை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.
இதுமட்டுமன்றி வரப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிறு வகைப் பயிறுகளைப் பயிரிட்டு கட்டுப்படுத்தலாம் என அவர்கள் எடுத்துக் கூறினர். ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் வெங்கடேசபெருமாள், திருமலை, வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.