குறைந்த மின்னழுத்த பிரச்னை: மின் வாரிய அலுவலகம் முற்றுகை

விழுப்புரம் புறநகர் பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

விழுப்புரம் புறநகர் பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
 விழுப்புரம் வழுதரெட்டி அருகே உள்ள கட்டபொம்மன் நகர், மஞ்சு நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளதாம். இதனால், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைவதாகக் கூறி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் விழுப்புரம் புறநகர் பகுதி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
 அப்போது அவர்கள் கூறியதாவது: கட்டபொம்மன் நகர், மஞ்சுநகர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளது. இதனால், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுதாகி பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். இந்தப் பிரச்னை தொடர்பாக கடந்த ஏப்.24-ஆம் தேதி மின்வாரிய அலுவலகத்தில் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், மின்வாரியத்தினர் அதை சீர்படுத்தவில்லை. மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்றனர்.
 போராட்டம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த விழுப்புரம் மின்வாரிய உதவி கோட்டப் பொறியாளர் சிவ.சங்கரன், உதவி பொறியாளர் துரை ஆகியோர் குடியிருப்போர் நல சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூடுதல் மின்தேவை ஏற்பட்டதால் இந்தப் பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பதற்காக ஏற்பாடு நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்படும். இதையடுத்து பிரச்னை தீரும் என்றனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 ஏ.சி. பயன்பாடு அதிகரிப்பு
 உதவி கோட்டப் பொறியாளர் சிவ.சங்கரன் கூறியதாவது: விழுப்புரம் நகரம், புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளில் தற்போது கோடை காலத்தையொட்டி ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளது. மாலை நேரத்தில் ஏ.சி. இயந்திரங்கள் பெருமளவில் இயக்கப்படுவதால் மின்மாற்றிகள் மின்பளு தாங்காமல் பழுதாகின்றன. இதனால் கூடுதல் மின்தேவைக்கேற்ப மின்மாற்றிகளை அமைக்க வேண்டியுள்ளது. அதற்கான இடத்தையும் குடியிருப்புப் பகுதிகளில் ஒதுக்கி வைப்பதில்லை.
 புதிய மின்மாற்றிகள் அமைப்பதில் பல நெருக்கடிகள் உள்ளன. ஏ.சி. போன்ற மின் சாதனங்களை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஏ.சி. அறைகளில் உரிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழுதான ஏ.சி. இயந்திரங்களை சீரமைத்து பயன்படுத்த வேண்டும். கோடை காலத்தில் ஏற்படும் திடீர் மின் தேவைக்காக ஒரே நேரத்தில் கூடுதல் மின்மாற்றிகளை அமைப்பதும் சாத்தியமில்லை. இருப்பினும், மின் பழுது ஏற்படும் பகுதிகளில் உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com