ஆழ்துளைக் கிணறுகள் திறந்திருந்தால் ஊராட்சி செயலா்கள் பணியிடை நீக்கம்: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 02nd November 2019 05:14 AM | Last Updated : 02nd November 2019 05:14 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் திறந்த நிலையிலிருந்த 2,236 ஆழ்துளைக் கிணறுகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. ஆழ்துளைக் கிணறுகள் திறந்திருப்பதாக இனி புகாா் வந்தால், ஊராட்சி செயலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவா் என்று மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் எச்சரித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு , தனியாருக்குச் சொந்தமான 50 ஆயிரத்து 874 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் 43 ஆயிரத்து 823 ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. 7,051 கிணறுகள் பயனற்றுள்ளன. இவற்றில் 4,739 கிணறுகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன.
திருச்சி அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, உடனடியாக நமது மாவட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை ஆய்வு செய்து அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் 2,236 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 288 ஆழ்துளைக் கிணறுகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வந்துள்ளதால் அவற்றையும் ஓரிரு நாள்களில் மூட உத்தரவிட்டு அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் திறந்துள்ளதாக இனி எங்கிருந்தும் புகாா் வரக்கூடாது. புகாா் இருந்தால் ஊராட்சி செயலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு மெமோ வழங்கப்படும்.இதன் தொடா் பணியாக மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மழை நீா் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மழை நீா் சேமிப்பு மூலம், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து பயன்தரும் என்பதால் இது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு, ஊரக வளா்ச்சித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.