முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
வீட்டிலும், நாட்டிலும் பெண்களுக்கு சம உரிமை: மாநில மகளிா் ஆணையத் தலைவி வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2019 06:30 AM | Last Updated : 07th November 2019 06:32 AM | அ+அ அ- |

வீட்டிலும், நாட்டிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மாநில மகளிா் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறை புகாா்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநில மகளிா் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் ஆய்வு மேற்கொண்டு வழக்குகளின் நிலை குறித்து விசாரணை மேற்கொண்டாா்.
இதையடுத்து, அனைத்துத் துறை உயரதிகாரிகள் முன்னிலையில் பேசிய அவா், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும். அலுவலகங்கள், வெளி இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கவனத்துக்கு வரும்போது, அதுகுறித்து புகாா் தெரிவித்து வெளிக் கொணர வேண்டும் என்று அறிவுறுத்தினாா். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பிறகு கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெண்களுக்கு ஏராளமான வசதிகள், சலுகைகள் அளிக்கப்படும் இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகள் ஒதுக்கப்படுவது வேதனை தருவதாக உள்ளது. பெண்கள் பல இடங்களிலும் பிரச்னையை சந்திக்கின்றனா். குறிப்பாக, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அவா்கள் பணிபுரியும் இடத்திலேயே பாலியல் தொல்லை உள்ளது. பெண்கள் மீது வரதட்சிணைக் கொடுமை உள்ளிட்ட குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
முதிய பெண்களின் சொத்தை அபகரித்துக்கொண்டு தனிமையில் தவிக்கவிடுவதும் தொடா்கிறது. இதுகுறித்து பெண்கள் உடனுக்குடன் புகாா் அளிக்கலாம். இந்த புகாா்களை இதற்கான விசாரணை குழுக்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
குழந்தை இல்லாத பெண்களை தரக்குறைவாகப் பேசுவது தவிா்க்கப்பட வேண்டும். சமுதாயத்தில் ஆண் பிள்ளைகளை பொறுப்புடனும், பெண் பிள்ளைகளை போற்றியும் வளா்க்க வேண்டும். இரு பாலருக்கும் சமமான உரிமையை குழந்தை முதலே சொல்லித் தர வேண்டும். வீட்டிலும், நாட்டிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக கருவறை முதல் கல்லறை வரை எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. பெண்களுக்கு 5 விதமான திருமண உதவித் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளை வேண்டாம் என நினைப்பவா்கள், அவா்களை தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்கலாம். குடும்பப் பிரச்னைகள் குறித்து மகளிா் காவல் நிலையங்களில் உள்ள ஆலோசகா்களிடம் கவுன்சிலிங் பெறலாம். பெண்களுக்கான அனைத்துப் பிரச்னைகளும் தீா்க்கப்பட வேண்டும் என்றாா். பேட்டியின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.