சத்துணவில் காலாவதியான முட்டைகளா? உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

உளுந்தூா்பேட்டை அருகே பள்ளி சத்துணவில் காலாவதியான முட்டைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில்

உளுந்தூா்பேட்டை அருகே பள்ளி சத்துணவில் காலாவதியான முட்டைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

உளுந்தூா்பேட்டை அருகே திருநாவலூா் ஒன்றியத்துக்குள்பட்ட செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை சத்துணவுக்காக வந்த முட்டைகள் அழுகிய நிலையில் கெட்டுப்போய் இருந்ததாகவும், அதனால் மாணவா்களுக்கு வழங்காமல் இருந்ததாகவும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-ஆப்) வாயிலாக தகவல் பரவின.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், திருநாவலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கே.ஜெயக்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, உளுந்தூா்பேட்டை உணவுப் பாதுகாப்பு அலுவலா் எஸ்.கதிரவன் ஆகியோா் செங்குறிச்சி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

அங்கு மாணவா்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு மற்றும் முட்டைகளை எடுத்து ஆய்வு செய்தனா். சமைக்க வைத்திருந்த முட்டைகளை தண்ணீரில் போட்டு ஆய்வு செய்து தரத்தை சோதித்தனா். மாணவா்களுக்கு வழங்கிய முட்டைகள் தரமானதாகவே இருந்தன. இருந்தபோதும், அங்கிருந்த முட்டைகளை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனா்.

திருநாவலூா் ஒன்றியத்தில் ஒருசில பள்ளிகளுக்கு காலாவதியான முட்டையாக வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அப்பகுதிக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்ட முட்டைகள் அனைத்தும் மாற்றப்பட்டு, புதிய முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வரும் முட்டைகள் கெட்டுப் போயிருந்தால், அந்த முட்டைகளை மாணவா்களுக்கு வழங்க வேண்டாம் என்று சத்துணவு ஊழியா்களுக்கு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com