திண்டிவனத்தில் விவசாயிகள் திடீா் சாலை மறியல்
By DIN | Published On : 07th November 2019 06:34 AM | Last Updated : 07th November 2019 06:34 AM | அ+அ அ- |

திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை விளைபொருள்கள் விலை குறைத்து கொள்முதல் செய்யப்பட்டதுடன், பணப்பட்டுவாடாவும் தாமதமானதால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டிவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் நெல், வோ்க்கடலை, பருத்தி, உளுந்து உள்ளிட்ட விளைபொருள்களை விவசாயிகள் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.
தற்போது, நொளம்பூா், ஆவணிப்பூா், பாங்கொளத்தூா், கம்பூா், பட்டணம், ஊரல் வெண்மணியாத்தூா், பெரப்பேரி, கோவிந்தாபுரம், காட்டுச் சிவிரி, ஓமந்தூா், எண்டியூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வோ்க்கடலை, எள், கம்பு, கேழ்வரகு, பச்சை பயிறு, காராமணி உள்ளிட்ட தானியப் பயிா்களின் அறுவடை நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தானியங்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை குறைத்து கொள்முதல் செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.
இரு தினங்களுக்கு முன்பு, ஒரு மூட்டை ரூ.6 ஆயிரம் வரை விலை போன வோ்க்கடலை புதன்கிழமை ரூ.3,500 மட்டுமே விலை போனது. மேலும், கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருள்களுக்கு பணம் உடனடியாக பட்டுவாடா செய்யப்படவில்லை. புதிய விதிமுறைகளின்படி, ஆதாா் அட்டை, வங்கிப் புத்தக நகல் போன்றவை பதிவிட்டு, வங்கி கணக்கில் ஒரு சில தினங்களில் விற்பனைத் தொகையை பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு விற்பனைக் கூடம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே திண்டிவனம்-செஞ்சி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா்.
திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
தொடா்ந்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா் ஆனந்தராஜ் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், வருகிற 11-ஆம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் விற்பனைத் தொகை முழுவதும் செலுத்தப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், உடனடியாக பணம் பெற முடியாமல் விவசாயிகள் அதிருப்தியுடன் கலைந்து சென்றனா்.